ADDED : பிப் 19, 2025 04:09 AM

வாஷிங்டன்: அமெரிக்க அரசின் கருவூலத்தில் இருந்து, 409 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் எதற்காக செலவானது என்ற கணக்கு காட்டப்படவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற உடன், டி.ஓ.ஜி.இ., எனப்படும் சிறந்த நிர்வாகத்துக்கான துறை என்ற அரசு சாரா அமைப்பை உருவாக்கினார். அமெரிக்க அரசின் நிர்வாகத்தில் செய்யப்படும் வீண் செலவுகளை தடுப்பது, கணக்குகளை முறைப்படுத்துவது போன்றவற்றுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் இதன் தலைவராக உள்ளார். உலகெங்கும் பல நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை நிறுத்தி, இந்த அமைப்பு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், எலான் மஸ்க், சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது: அரசின் கருவூலத்தில் இருந்து செலுத்தப்படும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும், ஒரு கணக்கு குறியீடு இருக்கும். இந்தக் குறியீட்டின் அடிப்படையில்தான், பட்ஜெட்டில் எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டது, அது எவ்வாறு செலவிடப்பட்டது என்பது தெரியவரும்.
டி.ஓ.ஜி.இ., கருவூலத் துறை மற்றும் மத்திய வங்கி ஆகியவை இணைந்து சமீபத்தில் ஆய்வுகள் நடத்தின. இதில், கருவூலத்தில் இருந்து, 4-09 லட்சம் கோடி ரூபாய்க்கான செலவினங்களுக்கு, எவ்வித கணக்கு குறியீடும் இடம்பெறவில்லை. இதனால், இந்தத் தொகை, யாருக்கு, எதற்காக வழங்கப்பட்டது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து, இனி ஒவ்வொரு செலவினத்துக்கும், பரிவர்த்தனைக்கும் கணக்கு குறியீடுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.