டிரம்பின் ஆசை நிறைவேறுகிறது; ரூ.2,200 கோடியில் பால்ரூம் கட்ட வெள்ளை மாளிகை இடிக்கும் பணிகள் தொடக்கம்
டிரம்பின் ஆசை நிறைவேறுகிறது; ரூ.2,200 கோடியில் பால்ரூம் கட்ட வெள்ளை மாளிகை இடிக்கும் பணிகள் தொடக்கம்
ADDED : அக் 21, 2025 07:59 AM

வாஷிங்டன்; அதிபர் டிரம்பின் நீண்ட் நாள் ஆசையான அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஒரு பகுதியை இடிக்கும் பகுதிகள் தொடங்கி உள்ளன. இங்கு ரூ.2200 கோடியில் பால்ரூம் அமைக்கப்படுகிறது.
அமெரிக்காவின் அடையாளமாகவும், அந்நாட்டு அதிபர்களின் வரலாற்று சிறப்புமிக்க இல்லமாக வெள்ளை மாளிகை உள்ளது. இந்த மாளிகையின் கிழக்கு பகுதி கட்டடம் 1902ம் ஆண்டு கட்டப்பட்டது. இறுதியாக 1942ம் ஆண்டு மாற்றியமைக்கப்பட்டது.
அதிபராக பதவியேற்ற பின்னர், வெள்ளை மாளிகையின் ஒருபகுதி இடிக்கப்பட்டு பால் ரூம் அமைக்கப்படும் என்று டிரம்ப் அறிவித்து இருந்தார். இது அவரின் கனவு என்பதோடு நீண்ட நாள் விருப்பம் ஆகும். அவரின் ஆசையை பூர்த்தியாக்கும் விதத்தில அதற்கான கட்டுமான பணிகள் தற்போது தொடங்கி உள்ளன.
இந்த விபரத்தை அதிபர் டிரம்ப் தமது ட்ரூத் சோஷியல் பதிவில் வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் அவர் கூறி இருப்பதாவது;
அமெரிக்க வெள்ளை மாளிகையின் வளாகத்தில் புதிய. பெரிய மற்றும் அழகான பால்ரூம் கட்டும் பணிகளுக்காக பள்ளம் தோண்டப்பட்டு உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வெள்ளை மாளிகையின் கிழக்கு பகுதி முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மிக அழகாக, முழுமையாக நவீனமயமாக்கப்பட்டு வருகிறது.
நாட்டின் ஒவ்வொரு அதிபரும், வெள்ளை மாளிகை வளாகத்தில் மிக பிரமாண்ட விருந்துகள், கலைநிகழ்ச்சிகளுக்காக மக்களை தங்க வைக்க ஒரு பால்ரூம் வேண்டும் என்று 150 ஆண்டுகளுக்கும் மேலாக கனவு கண்டு வந்தனர்.
வரி செலுத்துவோருக்கு எந்த சிரமும் இன்றி, இந்த கனவை செயல்படுத்திய முதல் அதிபர் நான் என பெருமைப்படுகிறேன். இந்த பால்ரூம் வரும் காலக்கட்டங்களில் பயன்படுத்தப்படும்.
இவ்வாறு தமது ட்ரூத் சோஷியல் பதிவில் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளை மாளிகையில் இடிக்கப்படும் பகுதியில் புதியதாக ரூ. 2.200 கோடியில் அமைக்கப்படும் இந்த பால்ரூமில், சர்வதேச நாடுகளின் தலைவர்கள், அவர்கள் உடனான அரசியல் சந்திப்புகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.