சி.ஐ.ஏ., தலைவராக இந்தியருக்கு வாய்ப்பு; டிரம்ப் விசுவாசி காஷ் படேல் யார் தெரியுமா?
சி.ஐ.ஏ., தலைவராக இந்தியருக்கு வாய்ப்பு; டிரம்ப் விசுவாசி காஷ் படேல் யார் தெரியுமா?
ADDED : நவ 07, 2024 07:27 AM

வாஷிங்டன்: உலகின் மிக சக்தி வாய்ந்த உளவு அமைப்பான சி.ஐ.ஏ.,வின் தலைவராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.
உலகில் செயல்படும் உளவு அமைப்புகளில் மிகவும் வலிமையானது அமெரிக்காவின் சி.ஐ.ஏ., அமைப்பாகும். எதிரி நாடுகள், நட்பு நாடுகள் என அனைத்தையும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைத்திருக்கும் வேலையை செய்கிறது இந்த அமைப்பு. அமெரிக்க அரசின் திட்டப்படி பல நாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் போர்களை நடத்தவும், தூண்டவும், நடக்கும் போர்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் செய்வது தான் இந்த அமைப்புக்கு முழு நேர வேலையாக தரப்பட்டிருக்கிறது.
இதன் தலைவராக இருப்பவருக்கு அதிகாரங்கள் ஏராளம். நிதி ஒதுக்கீடும் எக்கச்சக்கமாக கிடைக்கும். அமெரிக்காவில் சர்வ வல்லமை பொருந்திய பதவிகளில் சி.ஐ.ஏ., தலைவர் பதவியும் ஒன்று. தற்போது அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில், சி.ஐ.ஏ.,வுக்கு தலைவராக அவரது ஆதரவாளர் நியமிக்கப்படுவது உறுதியாகி உள்ளது.
டிரம்பின் கடந்த அதிபர் பதவிக் காலத்தில் பாதுகாப்பு, உளவுத்துறையில் முக்கிய பதவி வகித்த, அவரது விசுவாசியும், இந்தியருமான காஷ் படேல் சி.ஐ.ஏ., தலைவராக தேர்வு செய்யப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
யார் இந்த காஷ் படேல் ?
* பிப்.,25ம் தேதி 1980ம் ஆண்டு நியூயார்க்கில், கிழக்கு ஆப்ரிக்காவில் இருந்து குடியேறிய இந்திய பெற்றோருக்கு காஷ் படேல் பிறந்தார். இவரது பெற்றோர் குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர்கள்.
* இவர் லண்டன் பல்கலை.,யில் சட்டப்படிப்பு முடித்துள்ளார்.
* டிரம்பின் முதல் அதிபர் பதவி காலத்தில் காஷ் படேல் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றினார்.
* இவர் பயங்கரவாத குழுக்களுடன் தொடர்புடைய நபர்கள் மீது வழக்கு தொடரப்படுவதை மேற்பார்வையிட்டார்.
* குடியரசு கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக காஷ் படேல் பிரசாரம் மேற்கொண்டார்.
* இவர் பல்வேறு முக்கிய வழக்குகளுக்கு வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார்.
* இவர் 9 ஆண்டுகள் தனது வாழ்வை நீதிமன்றங்களில் கழித்துள்ளார்.
* நீதித்துறையில் பல்வேறு உயர் பதவிகளை வகித்த படேல், முக்கிய நபராக திகழ்ந்தார்.
* டிரம்பின் முக்கிய செயல்திட்டங்களுக்கு காஷ் படேல் மேற்பார்வையாளராக பணியாற்றி உள்ளார்.
* இவர் டிரம்புக்கு சொந்தமான ட்ரூத் சமூக ஊடகத்தில், டெக்னாலஜி பிரிவில் பணியாற்றுகிறார்.