ஒபாமா சகோதரர் தான்; ஆனால் அவரது கட்சி பிடிக்காது: டிரம்புக்கு தான் ஓட்டுப்போடுவேன் என உறுதி
ஒபாமா சகோதரர் தான்; ஆனால் அவரது கட்சி பிடிக்காது: டிரம்புக்கு தான் ஓட்டுப்போடுவேன் என உறுதி
UPDATED : செப் 06, 2024 01:04 PM
ADDED : செப் 06, 2024 01:02 PM

வாஷிங்டன்: ஜனநாயக கட்சியை சேர்ந்த அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் ஒன்றுவிட்ட சகோதரர், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்புக்கு ஓட்டளிப்பதாக கூறியுள்ளார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபருக்கான தேர்தல் நவம்பர் 5ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் 2 மாதங்களே உள்ளதால் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை எதிர்த்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஜனநாயக கட்சி சார்பில் களமிறங்குகிறார்.
இருவருக்கும் கடும் போட்டி நிலவி வரும் சூழலில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா (ஜனநாயக கட்சி) ஒன்றுவிட்ட சகோதரர் மாலிக் ஒபாமா, டிரம்புக்கு தான் ஓட்டளிப்பேன் என அறிவித்துள்ளார். ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவரான பராக் ஒபாமாவின் சகோதரரே எதிர்க்கட்சி தலைவருக்கு ஓட்டளிப்பதாக கூறியது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
மாலிக் ஒபாமா, தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், 'நான் மாலிக் ஒபாமா. குடியரசு கட்சிக்காரனாக பதிவு செய்கிறேன். அதிபர் டிரம்புக்கு நான் ஓட்டளிக்கிறேன்' எனக் கூறியுள்ளார். அவர் டிரம்புக்கு ஆதரவாக மாலிக் பேசுவது இது முதன்முறையல்ல. 2016 தேர்தலிலும் டிரம்புக்கு ஓட்டளிப்பதாகவும், டிரம்பின் கொள்கைகளை ஆதரிப்பதாகவும் கூறினார்.
![]() |
யார் இந்த மாலிக் ஒபாமா?
பராக் ஒபாமாவின் தந்தையின் முதல் மனைவிக்கு பிறந்தவர்தான் இந்த மாலிக் ஒபாமா. கென்யாவில் பிறந்திருந்தாலும் அமெரிக்க குடியுரிமையும் பெற்றுள்ளார். முன்பு கென்யாவில் தன் தந்தை பிறந்த மாவட்டமான சியாயா கவர்னர் பதவிக்கு போட்டியிட்டார். ஆனால், அவர் 1 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெற்றிருந்தார்.
பராக் ஒபாமா அதிபராக இருந்தபோது அவரை பார்க்க வெள்ளை மாளிகைக்கும் சென்றுள்ளார். அதற்கிடையே 'பராக் எச். ஒபாமா அறக்கட்டளை' என்ற தொண்டு நிறுவனத்தை துவங்கிய மாலிக், அதனை பதிவு செய்ய தவறிவிட்டதுடன் பல்வேறு சிக்கல்களையும் சந்தித்தார். அதில் பராக் ஒபாமா தனக்கு உதவவில்லை என்பதால் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பராக் ஒபாமாவுக்கு எதிராக திரும்பியதுடன் எதிர்க்கட்சியில் இருக்கும் டிரம்பை ஆதரித்து கருத்து தெரிவித்து வருகிறார்.