அடுத்து யாரை அழைப்பது: மேடையில் பைடனுக்கு ஏற்பட்ட திடீர் மறதி
அடுத்து யாரை அழைப்பது: மேடையில் பைடனுக்கு ஏற்பட்ட திடீர் மறதி
ADDED : செப் 22, 2024 05:47 PM

வாஷிங்டன்: குவாட் மாநாட்டின் போது, மேடையில் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அடுத்து யாரை அழைப்பது என மறந்து தடுமாறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இவருக்கு 81 வயதாகிறது. வயது முதிர்வு காரணமாக தடுமாறி வருகிறார். இதனால், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இந்நிலையில், அமெரிக்காவில் குவாட் அமைப்பின் மாநாடு நடந்தது. இதில், அதிபர் பைடன், பிரதமர் மோடி, ஆஸி., பிரதமர் அந்தோணி அல்பேன்ஸ், ஜப்பான் பிரதமர் பிமியோ கிஷிடா ஆகியோர் கலந்து கொண்டனர். பிறகு இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் புற்றுநோயால் அவதிப்படுபவர்களுக்கு உதவும் வகையில் நலத்திட்டம் துவக்க விழா நடந்தது.
இந்த திட்டத்தில் பேசிய பைடன், தலைவர்கள் ஒவ்வொருவரை அறிமுகம் செய்து பேசி கொண்டு இருந்தார்.
அப்போது பிரதமர் மோடியை அறிமுகம் செய்ய வேண்டிய நேரத்தில் அவருக்கு திடீரென மறதி ஏற்பட்டது. அடுத்து நான் யாரை அறிமுகம் செய்ய வேண்டும்? அடுத்தது யார்? என மைக்கில் கேட்டார். அப்போது, அங்கிருந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர், பிரதமர் மோடி எனக் கூறினார். உடனடியாக அங்கு மோடி எழுந்து வந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு முன்னர், வாஷிங்டன்னில் நடந்த நேட்டோ மாநாட்டில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அறிமுகம் செய்யும் போது உக்ரைன் அதிபர் புடின் பெயரை கூறி அங்கிருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.