இந்தியர்கள் ஓட்டு யாருக்கு ? அமெரிக்க அதிபர் தேர்தலில் " கார்டு" யார் கையில் ?
இந்தியர்கள் ஓட்டு யாருக்கு ? அமெரிக்க அதிபர் தேர்தலில் " கார்டு" யார் கையில் ?
UPDATED : செப் 07, 2024 12:59 PM
ADDED : செப் 07, 2024 12:24 PM

நியூயார்க்: வரும் நவம்பர் மாதத்தில் அமெரிக்க தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்தியர்கள் ஓட்டுக்கள் மிக முக்கியம் வாய்ந்தது என்பதை அமெரிக்க முக்கிய அரசியல் கட்சிகள் உணர துவங்கி உள்ளன. இந்தியர்கள் ஓட்டு வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் முக்கிய பலமாக எழுந்துள்ளது.
அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கமலாஹாரீஸ் (ஜனநாயக கட்சி) , டொனல்டு டிரம்ப் (குடியரசுகட்சி) . இருவரில் யாருக்கு அதிகம் செல்வாக்கு உள்ளது என்ற பேச்சு தற்போது தலைதூக்கி உள்ளது. காரணம் அமெரிக்க நிர்வாகம், பொருளாதாரம் சீர்குலைந்து விட்டதாக எதிர்கட்சி குற்றம் சாட்டுகிறது. இந்த தருணத்தில்தான் அதிபர் ஜோபைடன் விலக்கப்பட்டு கட்சி சார்பில் ஒருமித்த கருத்துடன் கமலா ஹாரீஸ் அதிபர் வேட்பாளரானார். இது ஜனநாயக கட்சிக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு ஏற்பட்டு கட்சிக்கு உத்வேகம் தந்துள்ளது.
வலுவிழந்த துப்பாக்கி சப்தம் !
டிரம்ப் ஒரு பொறுப்பற்ற மனிதராக இருப்பார். இவரால் நல்ல நிர்வாகத்தை தரமுடியாது என்கிறது ஆளும் கட்சி. இதற்கிடையில் கடந்த மாதத்தில் பிரசாரத்தின்போது டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காதில் லேசான ரத்தகாயத்துடன் நூலிலையில் உயிர் தப்பினார். இந்த சம்பவம் நடந்த நேரத்தில் டிரம்ப்பே அதிபர் ஆவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆறின கஞ்சி பழங்கஞ்சி என்பது போல் தற்போது இது எடுபடவில்லை.
கமலாவுக்கே இந்தியர்கள் ஓட்டு
இதற்கும் மேலாக தற்போது அமெரிக்க வாழ் இந்தியர்கள் ஓட்டு யாருக்கு மொத்தமாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கமலா ஹாரீஸ் இந்திய வம்சாவளி என்பதால் இவருக்கே ஓட்டளிக்க வேண்டும் என சில இந்திய அமைப்பினர் குரல் எழுப்ப துவங்கி உள்ளனர். பல இந்தியர்கள் மற்றும் பல ஹிந்து அமைப்புகளும், அமெரிக்க தேர்தலுக்கு சில அமைப்புகள் மூலம் ஓட்டுக்களை கவர முயற்சிகள் நடந்து வருகிறது. இந்த அமைப்புகள் பெரும்பாலும் கமலா ஹாரீசுக்கே ஆதரவுக்கரம் நீட்டுகிறது. கமலா ஹாரீஸ் அதிபரானால், இந்திய - அமெரிக்க உறவு மேம்படும் என பேசப்படுகிறது. இதனால் இந்தியர்கள் கமலாவுக்கே ஓட்டளிக்க வேண்டும் என்ற குரலும் மேலோங்கி ஒலிக்கிறது.
தற்போது இந்தியா , மற்றும் இந்திய புலம் பெயர்ந்தோர் சார்ந்த ஒரு அமைப்பு துவக்கப்பட்டுள்ளது. குறைந்தது ஒரு லட்சம் பேரை உறுப்பினராக சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு மூலம் ஒருங்கிணைந்த பிரசாரம் மேற்கொள்வது , இந்திய அமெரிக்கர்களின் ஓட்டு முக்கியத்துவத்தை உணர்த்துவது என பல யூகங்கள் வகுத்துள்ளன. அமெரிக்காவின் இரு முக்கிய கட்சிகளாக ஜனநாயககட்சி, குடியரசு கட்சிகள் மத்தியில் இந்தியர்கள் ஓட்டுக்கள் பலத்தை எடுத்து செல்வது என திட்டம் தீட்டி உள்ளனர்.
அமெரிக்க மொத்த மக்கள் தொகையில் இந்திய வம்சாவளியினர் 1.5 சதவீதம் பேர் உள்ளனர். தற்போது ஏறக்குறைய 40 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் உள்ளனர். இவர்கள் ஓட்டு எந்த வேட்பாளருக்கு மொத்தமாக கிடைக்கிறதோ அந்த அடிப்படையில் வெற்றி, தோல்வி நிகழும் என நம்பப்படுகிறது. கமலாவா, டிரம்பா ? கார்டு இந்தியர்கள் கையில் !