‛சொர்க்கமே என்றாலும் தாய்நாட்டை போல வருமா...': ஸ்வீடனில் இருந்து இந்தியர்கள் வெளியேறுவது ஏன்?
‛சொர்க்கமே என்றாலும் தாய்நாட்டை போல வருமா...': ஸ்வீடனில் இருந்து இந்தியர்கள் வெளியேறுவது ஏன்?
UPDATED : ஆக 25, 2024 03:56 PM
ADDED : ஆக 25, 2024 03:47 PM

ஸ்டாக்ஹோம்: ஸ்வீடனில் இருந்து இந்தியர்கள் வெளியேறுவது அதிகரித்து உள்ளது. இதற்கு மனைவிக்கு வேலை கிடைக்காதது, பருவநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.
நாடு திரும்புகின்றனர்
ஐரோப்பாவின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடு, அழகான நிலப்பரப்பு, தனித்துவமான கலாசாரம் என பல பெருமைகளை கொண்டது ஸ்வீடன். அந்நாட்டிற்கு வேலை வாய்ப்பு, தொழில் என பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் சென்று குடியேறி வருகின்றனர். ஆனால், தற்போது இந்நிலை மாறி உள்ளதாக தெரியவருகிறது. அங்கிருந்து சொந்த ஊருக்கு ஏராளமான இந்தியர்கள் திரும்பி வருகின்றனர்.
171 சதவீதம்
கடந்த 20 ஆண்டுககளை ஒப்பிடுகையில், இந்தாண்டின் முதல் பாதியில் ஸ்வீடனுக்கு குடிபெயரும் இந்தியர்களின் எண்ணிக்கையை விட, அங்கிருந்து வெளியேறும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. 2024 ஜன., முதல் ஜூன் வரை 2,837 இந்தியர்கள் ஸ்வீடனை விட்டு வெளியேறி உள்ளனர். இது 2023ம் ஆண்டு காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 171 சதவீதம் அதிகம் ஆகும். அதேநேரத்தில் 2,461 இந்தியர்கள் புதிதாக குடிபெயர்ந்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு,3,681 இந்தியர்கள் ஸ்வீடனில் குடியேறியது குறிப்பிடத்தக்கது.
ஸ்வீடனில் இருந்து வெளியான புள்ளி விவரத்தின்படி, ஸ்வீடனில் இருந்து வெளியேறுபவர்களில், ஈராக், சீனா மற்றும் சிரியா நாட்டை சேர்ந்தவர்களை காட்டிலும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகம் எனக்கூறப்பட்டு உள்ளது.
காரணம் என்ன
இது தொடர்பாக ஸ்வீடனில் வசிக்கும் மென்பொருள் பொறியாளர் அங்கூர் தியாகி வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருவதால், நன்கு படித்தவர்கள் அதிக சம்பளம் மற்றும் சிறந்த பணி வாய்ப்பு கிடைப்பதால் பல இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்.
இத்துடன், தனிமையாக இருத்தல், நெருங்கிய நண்பர்கள் இல்லாததும் முக்கியமான காரணமாக உள்ளது. கலாசாரம் மற்றும் மொழிப் பிரச்னை காரணமாக ஏராளமான இந்தியர்கள் மற்றவர்களுடன் எளிதாக பழக முடிவதில்லை.
இந்தியர்கள் பலரின் மனைவிகள் நன்கு படித்தும், போதிய பணி அனுபவம் இருந்தாலும் அவர்களுக்கு அங்கு பணி கிடைப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் ஸ்வீடன் மொழியை அவர்களால் பேச முடியாததே. இதனால், சொந்த ஊரில் இருக்கும் வயதான பெற்றோர்களை பராமரிக்கவும், உறவினர்களுடன் நெருங்கி இருக்கவும், தாத்தா, பாட்டிகளுடன் குழந்தைகள் நேரத்தை செலவு செய்வதற்காக தாய்நாடு திரும்புகின்றனர்.
ஸ்வீடன் சமுதாயத்தில் ஒன்றிணைய இந்தியர்கள் சிரமப்படுகின்றனர். அங்கு நிலவும் பருவநிலை, அதிக செலவு ஆகியவற்றுடன் கோவிட் பெருந்தொற்றுக்கு பிறகு எங்கிருந்தாலும் வேலை செய்ய முடியும் என வசதி இருப்பதும் அவர்கள் சொந்த ஊரு திரும்புவதற்கு மற்றொரு காரணமாக உள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.
பிரச்னை
அதேநேரத்தில் ஸ்வீடன் - இந்தியா வர்த்தக கவுன்சில் பொதுச்செயலாளர் ரோபின் சுகியா கூறியதாவது: இந்தியர்கள் இங்கிருந்து வெளியேறுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொருளாதார அழுத்தங்கள், வீடுகளின் தட்டுப்பாடு, மற்றும் கடுமையான வேலை அனுமதி விதிமுறைகள் முக்கிய காரணங்களாக இருக்கலாம் என்கிறார்.