காசா அமைதி வாரியத்தில் நாடுகள் இணைய ரூ.9,000 கோடி கட்டணம் வசூலிப்பா? அமெரிக்க அதிபர் மாளிகை மறுப்பு
காசா அமைதி வாரியத்தில் நாடுகள் இணைய ரூ.9,000 கோடி கட்டணம் வசூலிப்பா? அமெரிக்க அதிபர் மாளிகை மறுப்பு
UPDATED : ஜன 19, 2026 07:07 AM
ADDED : ஜன 19, 2026 04:41 AM

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதி வாரியத்தில், சர்வதேச நாடுகள் இணைய 9,000 கோடி ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளதாக செய்தி பரவிய நிலையில், அதை அதிபர் மாளிகை மறுத்துள்ளது.
மறுகட்டமைப்பு
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள், கடந்த 2023ல் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,200 பேர் கொல்லப் பட்டனர். இதையடுத்து ஹமாஸ் பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்டுவது என்ற இலக்குடன் இஸ்ரேல், காசா மீது தீவிர தாக்குதல் நடத்தியது.
இரண்டு ஆண்டுகளாக நீடித்த போர் கடந்த ஆண்டு அக்டோபரில், அமெரிக்க அதிபர் டிரம்பின் 20 அம்ச அமைதி திட்டத்தின் கீழ் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது. அமைதி திட்டத்தின் கீழ் ஹமாஸ் பயங்கரவாதிகள் ஆயுதங்களை ஒப்படைப்பது, இஸ்ரேல் படைகள் பின்வாங்குதல், காசாவில் புதிய அரசு, மறுகட்டமைப்பு ஆகிய வற்றை செயல்படுத்த உள்ளனர்.
இதை மேற்பார்வையிட அதிபர் டிரம்ப், காசா அமைதி வாரியத்தை அமைத்தார். இதன் தலைவராக டிரம்ப் உள்ளார். வாரிய உறுப்பினர்களாக ஐரோப்பிய நாடான பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்டோர் உள்ளனர்.
சலுகை
இந்நிலையில், '9,000 கோடி ரூபாயை வழங்கும் நாடுகள், காசா அமைதி வாரியத்தில் நிரந்தர உறுப்பினர்களாக சேர்க்கப்படும். அந்த பணம் காசா மறு கட்டமைப்புக்கு பயன் படுத்தப்படும்' என வாரியத்தின் வரைவு ஆவணத்தில் இருப்பதாக அமெரிக்காவின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் அளித்த விளக்கத்தில் 'காசா வாரியத்தில் இணைவதற்கு கட்டணம் ஏதும் விதிக்கப்பட வில்லை. 'திட்டத்தில் அதிக ஈடுபாடு காட்டும் நாடுகளுக்கு மட்டும் நிரந்தர உறுப்பினர் சலுகை வழங்கப்படும்' என்றனர்.

