sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

உலகம்

/

மியான்மரில் ஆட்சி மாற்றத்துடன் காட்சியும் மாறுமா?

/

மியான்மரில் ஆட்சி மாற்றத்துடன் காட்சியும் மாறுமா?

மியான்மரில் ஆட்சி மாற்றத்துடன் காட்சியும் மாறுமா?

மியான்மரில் ஆட்சி மாற்றத்துடன் காட்சியும் மாறுமா?


ADDED : ஆக 18, 2025 12:05 AM

Google News

ADDED : ஆக 18, 2025 12:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மியான்மரில் இந்த ஆண்டு இறுதிக்குள் புதிதாக தேர்தல் நடத்தப்படும் என, எஸ்.ஏ.சி., எனப்படும் அந்நாட்டின் தேசிய நிர்வாக கவுன்சில் அறிவித்திருக்கிறது. நெருக்கடி நிலையும் வாபஸ் பெறப்படும் என தெரிவித்திருக்கிறது.

இதெல்லாம் உண்மையிலேயே நடக்குமா, இல்லை ராணுவ ஆட்சியாளர்கள் போடும் நாடகமா? என்ற கவலை அந்நாட்டு மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மர், முன்பு பர்மா என்றழைக்கப்பட்டது. இந்தியர்கள், அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிகமாக பர்மாவில் குடிபெயர்ந்து பெரு வணிகர்களாக திகழ்ந்தனர்.

ராணுவ அரசு ஒரு காலத்தில் வணிகர்களுக்கு சொர்க்க பூமியாக திகழ்ந்த மியான்மர், தற்போது ராணுவ ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கி இருக்கிறது. ஜனநாயகம் என்பது பெயரளவுக்குக் கூட அங்கு இல்லை. அந்த அளவுக்கு அங்கு ஜனநாயக ஆட்சி அடிக்கடி அகற்றப்பட்டு இருக்கிறது.

கடந்த, 2017ம் ஆண்டின் நிலவரப்படி வறுமை கோட்டுக்குக் கீழே வசிப்பவர்கள் மொத்தம் 24.8 சதவீதம் பேர். ஜனநாயகம், ராணுவம் என ஆட்சி நிர்வாகம் அடிக்கடி மாறியதால், மியான்மரின் வளர்ச்சி அதல பாதாளத்திற்கு சென்றிருக்கிறது.

குறிப்பாக 2021, பிப்., 1ம் தேதி அன்று ராணுவம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து நிலைமை மோசமாகி இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வன்முறை, சண்டை என மக்களின் வாழ்க்கை தினசரி திகிலுடனேயே கடந்து செல்கிறது. இதனால், ராணுவ ஆட்சியை எதிர்த்து கிளர்ச்சிகள் நடந்து வருகின்றன.

மக்கள் பாதுகாப்பு படை மற்றும் இன ஆயுத படைகள் என்ற பெயரில் பல்வேறு கிளர்ச்சி படைகள் உருவாகியிருக்கின்றன. ராணுவத்துக்கு எதிராக ஆயுதங்களை ஏந்திய கிளர்ச்சி படைகள், மியான்மரின் பாதிக்கும் மேற்பட்ட மாகாணங்களை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன.

இந்தச் சூழலில், நெருக்கடி நிலையை வாபஸ் பெறப் போவதாக ராணுவ அரசு அறிவித்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவோ அல்லது 2026 ஜனவரிக்குள்ளாகவோ ஜனநாயக முறையில் தேர்தல் நடத்தப்படும் என வாக்குறுதி அளித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டில் ஆட்சியை பிடித்தது முதல், அரசை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க இரு அமைப்புகளை உருவாக்கியிருந்தது ராணுவ அரசு.

முதல் அமைப்பின் பெயர் தேசிய பாதுகாப்பு மற்றும் ராணுவ கவுன்சில். பிரதமரின் தலைமையில் மக்கள் அமைப்பாக இது செயல்படும். எனினும், பிரதமராக இருக்கும் நியோ சாவ், ராணுவத்தால் நியமிக்கப்பட்டவர்.

இரண்டாவதாக இருக்கும் அமைப்பின் பெயர் தேசிய பாதுகாப்பு மற்றும் அமைதி கமிஷன். இதன் தலைவராக இருப்பவர் தற்போதைய ராணுவ தளபதியான ஜெனரல் மின் ஆங் லயாங். இவர் தான் 2021ல் ராணுவ ஆட்சியை அமல்படுத்தியவர். அதனால், ஜனநாயகம் எப்படி இருக்கும் என்பதை பற்றி சொல்லவே தேவையில்லை.

தேசிய நிர்வாக கவுன்சிலின் அதிகாரம், இந்த இரு அமைப்புகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ராணுவத்தால் நியமிக்கப்பட்ட பிரதமருக்கு கூடுதல் அதிகாரம் கிடைத்திருக்கிறது. ஆனாலும் மொத்த அதிகாரமும் ராணுவ தளபதியான ஜெனரல் மின் ஆங் லயாங்கிடமே குவிந்திருக்கிறது.

தேர்தல் இப்படியான ஒரு சூழலில் தான், இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருக்கிறது ராணுவ அரசு.

ஆகவே இந்த வாக்குறுதியை ராணுவ அரசு காப்பாற்றுமா? முறையாக தேர்தலை நடத்துமா? இல்லை கடைசி நேரத்தில் ரத்து செய்யுமா என்ற சந்தேகம் வலுத்து இருக்கிறது.

மறுபுறம் ராணுவ அரசின் இந்த அறிவிப்பு, நேர்மறையாகவே பார்க்கப்படுகிறது. அந்த வகையில், தேர்தல் நடத்துவதிலும் சில திருப்பங்களை எதிர்பார்க்கலாம் என்கின்றனர் மியான்மரின் அரசியல் நோக்கர்கள்.

பெயருக்கு தேர்தலை நடத்தி விட்டு, பார்லிமென்டில் தங்களுக்கு தலையாட்டும் பொம்மைகளை எம்.பி.,க்களாக அமர வைக்கலாம். அல்லது மீண்டும் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை எளிதாக கைப்பற்றலாம் என அரசியல் நோக்கர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மியான்மரின் அரசியலமைப்பின்படி, ராணுவம் சார்பில் பார்லிமென்டில் 25 சதவீத எம்.பி.,க்களை நியமிக்க முடியும். இதற்கான அதிகாரம் அந்நாட்டு ராணுவத்திற்கு இருக்கிறது.

ராணுவம், வெளியுறவு கொள்கை உள்ளிட்ட முக்கிய இலாகாக்களும் ராணுவத்தின் வசம் தன்னிச்சையாக செல்வதற்கும் அந்நாட்டு சட்டத்தில் இடம் இருக்கிறது.

உள்நாட்டில் ஆங்காங்கே நடக்கும் கிளர்ச்சிகள், அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாதது உள்ளிட்ட பிரச்னைகளை முறியடிக்க ராணுவத்திற்கு இந்த அதிகாரம் அவசியம் என, ராணுவ ஆட்சியாளர்கள் கூறுகின்றனர்.

அதே சமயம் இந்த அதிகாரம் ஜனநாயகத்தை அகற்றுவதற்கே இதுவரை அதிகம் பயன்பட்டு இருக்கிறது. அடுத்ததாக இருக்கும் சிக்கல் தேர்தல் நடைமுறை தொடர்பானது. நீண்ட காலமாகவே மியான்மரில் ராணுவ ஆட்சியே நடந்து வருகிறது. எனினும் தற்போது இருக்கும் அரசியலமைப்பு 2008ம் ஆண்டில் கொண்டு வரப்பட்டது.

இந்த சட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் ஆட்சி மீதே, ராணுவ தளபதி அதிகாரத்தை செலுத்த முடியும். 2010ம் ஆண்டில் இந்த அதிகாரத்தின்படி தான் தேர்தல் நடந்தது. 2015 மற்றும் 2020ம் ஆண்டிலும் இதே சட்டத்தின்படியே எந்த மாற்றமும் இல்லாமல் தேர்தல் நடந்தது.

கடந்த 2008ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின்படி, அரசியல் கட்சிகளுக்குள் அமைப்பு ரீதியாக எந்த மாற்றங்களை செய்ய முடியாது. அப்படி செய்தால், அந்த கட்சி தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழந்து விடும்.

ஜனநாயக முறைப்படி தவிர, தேர்தல் நடத்துவதற்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால், ராணுவம் அறிவித்திருக்கும் இந்த தேர்தல், ஜனநாயக முறைப்படி நடக்குமா என அரசியல் நோக்கர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.

எனினும், இது மியான்மரின் எதிர்கால வளர்ச்சிக்கான சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை அண்டை நாடான மியான்மரில் அமைதி நிலவினால் இரு தரப்பு உறவுகள் சீராகும். வடகிழக்கு மாநிலங்களிலும் பாதுகாப்பு தொடர்பான கவலை நீங்கும்.

- நமது சிறப்பு நிருபர் -






      Dinamalar
      Follow us