இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா?
இன்று அறிவிக்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப் ஆசை நிறைவேறுமா?
UPDATED : அக் 10, 2025 01:46 PM
ADDED : அக் 10, 2025 08:36 AM

ஓஸ்லோ; உலக அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆசை நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
உலக நாடுகள் மத்தியில் நோபல் பரிசு என்பது மகத்துவமான மற்றும் அதி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இலக்கியம், மருத்துவம், அமைதி என பல துறைகளில் வித்தகர்களாக உள்ளோர், சாதனை படைத்த நபர்களுக்கு அங்கீகாரமளிக்கும் இந்த விருது கடந்த சில நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது.
இன்றைய தினம் (அக்.10) உலக அமைதிக்கான நோபல் பரிசு 2025 அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த விருதுக்குரியோர் யார் என்ற தெரியாத நிலையில், தனக்கு தான் நோபல் பரிசு தர வேண்டும் என்று வெளிப்படையாக கூறி வரும் அமெரிக்க அதிபர் டிரம்பின் ஆசை முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நோபல் பரிசு எனக்குத்தான் தரவேண்டும், உலக நாடுகளின் மத்தியில் பல போர்களை நிறுத்தி உள்ளேன் என்று அவர் அடித்து வரும் தம்பட்டத்தை அவரை கண்மூடித்தனமாக ஆதரிக்கும் சில நாடுகள் உற்சாகமாக வரவேற்கின்றன. இந்த பட்டியலில் பாகிஸ்தான், அஜர்பைஜான், ருவாண்டா, கம்போடியா அடக்கம். இந்த நாடுகள், டிரம்புக்கு நோபல் பரிசு தர வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளன.
ஏற்கனவே 7 போர்களை நிறுத்தி உள்ளேன், தற்போது இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளதும், முக்கியத்துவம் பெறுகிறது. அவரின் கணக்கின்படி இது 8வது போர்நிறுத்தம் ஆகும். அமைதிக்கான அதிபர் டிரம்ப் (The Peace President) என்று வெள்ளை மாளிகை தமது எக்ஸ் வலை தள பதிவில் வெற்றி வீரனான டிரம்ப் நடந்து வருவது போன்ற ஒரு படத்துடன் அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறது.
டிரம்பின் ஆசை மற்றும் எதிர்பார்ப்பு நிறைவேறுமா? அல்லது நிராசையாகுமா? என்பது தெரியாத நிலையில், இதுவரை அமைதிக்கான நோபல் பரிசு வென்ற அமெரிக்க அதிபர்கள், முன்னாள் அதிபர்கள் யார் என்று பார்ப்போம்;
தியோடர் ரோஸ்வெல்ட் (1906);
உலக அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெற்றவர். இவருக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுக்கான பதக்கம் வெள்ளை மாளிகையில் இன்றளவும் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது.
உட்ரோ வில்சன்(1920);
அமெரிக்காவின் 28வது அதிபர். முதல் உலகப் போரை முடிவுக்கு கொண்டு வந்தவர். அமைதியை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் இவர் அரசுகளுக்கு இடையே லீக் ஆப் நேஷன்ஸ் என்ற அமைப்பை உருவாக்கியவர். அவரின் சிறந்த பங்களிப்புக்காக நோபல் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டார்.
ஜிம்மி கார்ட்டர்(2002)
இவர் அமெரிக்காவின் 39வது அதிபர். பதவியில் இருந்து விலகிய 21 ஆண்டுகள் கழித்து நோபல் பரிசை பெற்றவர். சர்வதேச நாடுகள் இடையேயான மோதலுக்கு அமைதியான முறையில் தீர்வுகளை கண்டது, ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சிக்கு வித்திடும் வகையில் அவரின் முயற்சிக்காக நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
அல் கோர் (2007);
இவர் முன்னாள் துணை அதிபர். காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே பரப்பிய அவரின் முயற்சிக்களுக்காக 2007ம் ஆண்டுக்கான நோபல் பரிசை வென்றவர்.
பராக் ஒபாமா(2009);
அமெரிக்காவின் 44வது அதிபர். அணு ஆயுத குறைப்பு, காலநிலை நடவடிக்கைகள், சர்வதேச அளவில் இவரின் ராஜதந்திரம், மக்கள் மத்தியில் இவரின் ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக நோபல் பரிசுக்குரியவராக தேர்ந்தெடுக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டவர்.
இவர்களின் பட்டியலில் டிரம்ப் இணைவாரா என்பது இன்றைய அறிவிப்பின் மூலம் உலகிற்கு தெரிய வரும்.
இதனிடையே, திடீர் திருப்பமாக டிரம்புக்கு நோபல் பரிசு தரலாம் என ரஷ்யா ஆதரவு தெரிவித்து உள்ளதாக அந்நாட்டின் செய்தி நிறுவனமான டாஸ் தகவல் வெளியிட்டு இருக்கிறது.