ADDED : ஆக 18, 2025 12:25 AM

இஸ்லாமாபாத்: 'பாகிஸ்தானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அரசியலில் நுழையும் திட்டம் ஏதுமில்லை; அவை வதந்திகள்' என அந்நாட்டின் ராணுவ தளபதி அசிம் முனீர் கூறியுள்ளார்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் கூட்டணி ஆட்சி நடக்கிறது.
சுதந்திரம் பெற்ற 1947ல் இருந்து இங்கு, நான்கு முறை ராணுவ தளபதிகள் ஆட்சியை கவிழ்த்து அதிகாரத்திற்கு வந்துள்ளனர். தற்போது, பாகிஸ்தான் ராணுவ தளபதியாக அசிம் முனீர் உள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அந்த நாட்டின் ராணுவ அதிகாரிகளுடனான அசிம் முனீரின் தொடர்பு, சீனாவுடனும் நெருக்கம் போன்ற காரணங்களால், ஷெபாஸ் ஷெரீப் அரசை கவிழ்த்துவிட்டு, அசிம் முனீர் அதிகாரத்தை கைப்பற்ற கூடும் என்ற தகவல் வெளியானது.
இது குறித்து அசிம் முனீர் சமீபத்தில் அளித்த பேட்டியில், '' கடவுள் என்னை இந்த நாட்டின் பாதுகாவலராக ஆக்கியுள்ளார். ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறேன் என்பது புனையப்பட்டவை. பாகிஸ்தானை சீர்குலைக்க முயற்சிப்பவர்களால் இது போன்ற செய்தி பரப்பப்படுகிறது,'' என் றா ர்.