விமானத்தில் சென்று போதைப் பொருள் 'சப்ளை' செய்த பெண்கள் கைது
விமானத்தில் சென்று போதைப் பொருள் 'சப்ளை' செய்த பெண்கள் கைது
ADDED : மார் 16, 2025 11:54 PM

ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைச் சேர்ந்த பம்பா பான்டோ, 31, மற்றும் அபிகைல் அடோனிஸ், 30, ஆகிய இரு பெண்களும் டில்லியில் சில ஆண்டுகளாக வசித்து வந்தனர்.
இருவரும், எம்.எம்.டி.ஏ., என்ற போதைப்பொருளை, நாடு முழுதும் விமானத்தில் சென்று வினியோகித்து வந்தனர்.
இதற்காக கடந்த ஆண்டில் மட்டும் இருவரும், 37 முறை மும்பைக்கும், 22 முறை பெங்களூருக்கும் விமான பயணம் மேற்கொண்டனர்.
மங்களூரைச் சேர்ந்த ஹைதர் அலி என்பவரை ஆறு மாதங்களுக்கு முன் போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், இந்த பெண்களை பற்றிய தகவல்களை தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பீட்டர் என்பவரை, சில நாட்களுக்கு முன், போதைப் பொருளுடன் கைது செய்த போலீசார், நேற்று இரு பெண்களையும் கைது செய்தனர்.
இந்த பெண்களிடம் இருந்து, 75 கோடி ரூபாய் மதிப்புள்ள எம்.எம்.டி.ஏ., போதைப்பொருள், நான்கு மொபைல் போன்கள், இரண்டு பாஸ்போர்ட் மற்றும் 18,000 ரூபாயை பறிமுதல் செய்துள்ள கர்நாடகா போலீசார், இருவரிடமும் தீவிரமாக விசாரிக்கின்றனர்.