உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: சாதிப்பரா இந்திய நட்சத்திரங்கள்
ADDED : செப் 04, 2025 07:26 AM

லிவர்பூல்: உலக குத்துச்சண்டை அமைப்பு சார்பில் முதன் முறையாக உலக சாம்பியன்ஷிப் தொடர் நடத்தப்படுகிறது. இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் இன்று துவங்கும் இத்தொடரில் ஒரே நேரத்தில் ஆண்கள், பெண்கள் பிரிவில் போட்டி நடக்க உள்ளன.
பாரிஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 17 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். கடந்த 2023ல் டில்லியில் நடந்த தொடரில் இந்திய பெண்கள் 4 தங்கம் வென்றனர். தாஷ்கென்ட் போட்டியில் 3 வெண்கலம் வென்றது இந்தியா. இம்முறை இந்தியா சார்பில் ஆண்கள் (10), பெண்கள் (10) என மொத்தம் 20 பேர் பங்கேற்கின்றனர்.
நிஹாத் நம்பிக்கை
இரு முறை உலக சாம்பியன், இந்தியாவின் நிஹாத் ஜரீன் (2022, 2023), டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற லவ்லினா, சுமார் ஒரு ஆண்டுக்குப் பின் சர்வதேச அரங்கில் களமிறங்குகின்றனர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்குப் பின் ஒரு உள்ளூர் தொடரில் மட்டும் பங்கேற்ற இவர்கள், போதிய பயிற்சிகள் இன்றி உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கின்றனர்.
இதில் நிஹாத் ஜரீன், இம்முறை புதிய 51 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்கிறார். முதல் சுற்றில் வலிமையான சீனாவின் உ யுவை சந்திக்கிறார்.
தவிர, 3 முறை உலக சாம்பியன் பதக்கம் வென்ற லவ்லினா (75 கிலோ), இரு முறை ஆசிய சாம்பியன் ஆன பூஜா ராணி (80), ஜாஸ்மின் (57), சாக் ஷி (54), மீனாட்ஷி (48) உட்பட 10 பேர் பங்கேற்க உள்ளனர்.
ஆண்கள் பிரிவில் 2021 ல் உலக யூத் சாம்பியன் சச்சின் சிவாச் (60 கிலோ), ஹர்ஷ் சவுத்ரி (86) தவிர, மற்ற வீரர்கள் ஜடுமணி (50), ஹிதேஷ் (70), அபினாஷ் (65) என மூவரும் முதன் முறையாக அறிமுகம் ஆகின்றனர்.