உலக செஸ்: பைனலுக்கு முன்னேறி வரலாறு படைத்தார் திவ்யா
உலக செஸ்: பைனலுக்கு முன்னேறி வரலாறு படைத்தார் திவ்யா
UPDATED : ஜூலை 24, 2025 06:20 AM
ADDED : ஜூலை 24, 2025 04:26 AM

பதுமி: உலக செஸ் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என வரலாறு படைத்தார் திவ்யா.
ஜார்ஜியாவில் பெண்களுக்கான செஸ் உலக கோப்பை தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 107 பேர் பங்கேற்கின்றனர். 'டாப்-3' இடம் பெறுபவர்கள், உலக சாம்பியன்ஷிப் தகுதிப் போட்டியில் ('கேண்டிடேட்ஸ்' செஸ்) பங்கேற்கலாம்.
'நாக் அவுட்' முறையிலான இத்தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் ஹம்பி, திவ்யா என இரு வீராங்கனைகள் முதன் முறையாக முன்னேறி, வரலாறு படைத்தனர். தற்போது அரையிறுதி நடக்கின்றன.
திவ்யா அபாரம் உலகத் தரவரிசையில் 18வது இடத்திலுள்ள, 19 வயது வீராங்கனை திவ்யா, 'நம்பர்-8' ஆக உள்ள சீனாவின் வலிமையான, முன்னாள் உலக சாம்பியன், ஜோங்இயை சந்தித்தார். முதல் போட்டி 'டிரா' ஆக, ஸ்கோர் 0-5.0-5 என இருந்தது. நேற்று இரண்டாவது போட்டி நடந்தது. இம்முறை திவ்யா வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார்.
5 மணி நேரம், 45 நிமிடம் நடந்த போட்டியில், 101 வது நகர்த்தலில் திவ்யா வெற்றி பெற்றார். உலக செஸ் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை ஆனார். தவிர 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார்.
ஹம்பி 'டிரா' உலகத் தரவரிசையில் 'நம்பர்-5' வது இடத்திலுள்ள ஹம்பி, 'நம்பர்-3', சீனாவின் லெய் டிங்ஜீ மோதினர். முதல் போட்டி 'டிரா' ஆனது. நேற்று 2வது போட்டி நடந்தது. வெள்ளை நிற காய்களுடன் ஹம்பி விளையாடினார். 50 வது நகர்த்தலுக்குப் பின் ஹம்பி ஆதிக்கம் செலுத்தினார். இருப்பினும் வாய்ப்பை தவறவிட்ட ஹம்பி, 75 வது நகர்த்தலில் 'டிரா' செய்தார். ஸ்கோர் 1.0-1.0 என சமனில் உள்ளது.
இன்று 'டை பிரேக்கர்' நடக்கிறது. இதில் வென்றால், பைனலில் திவ்யாவை எதிர்கொள்ளலாம்.