ADDED : மார் 31, 2026 05:00 AM
துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலி
அபுஜா: மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், பிளாட்டோ மாகாணத்தின் ஜோஸ் பகுதியில், நேற்று முன்தினம் இரவு பைக்குகளில் ஆயுதங்களுடன் வந்த வன்முறை கும்பல், குடியிருப்பு பகுதியில் வசித்த மக்களை நோக்கி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தப்பியது. இதில், அங்கு வசித்த, 20 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
வெள்ளத்தில் சிக்கி 28 பேர் பலி
காபூல்: தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில், சமீபத்தில் பெய்த மழையால், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஆங்காங்கே நிலச்சரிவும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் அந்நாட்டின் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தொடர் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை வெள்ளப்பெருக்கில் சிக்கி, 28 பேர் பலியாகி உள்ளனர்; 49 பேர் காயமடைந்தனர். 250க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறந்துள்ளன.
7.3 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம்
வனுவாட்டு: தென் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள வனுவாட்டு தீவின் அருகே, 7.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் நேற்று பதிவானது. இது, 115 கி.மீ., ஆழத்திலும், அந்தத் தீவின் லுகன்வில்லுக்கு வடகிழக்கே, 35 கி.மீ., தொலைவில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
தங்க சுரங்கத்தில் 70 பேர் கொலை
ஜூபா: கிழக்கு ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானில் உள்ள மத்திய ஈகுவெட்டோரியா மாகாணத்தின், ஜெபல் ஈராக் பகுதியில் தங்கச்சுரங்கம் உள்ளது. இங்கு இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்; பலர் காயமடைந்தனர். இச்சம்பவத்துக்கு எதிர்க்கட்சியான சூடான் மக்கள் விடுதலை இயக்கம் கண்டனம் தெரிவித்ததுடன், இதற்கு பாதுகாப்பு படையினரே காரணம் என குற்றஞ்சாட்டியது.
3வது நாளாக தொடரும் போராட்டம்
காத்மாண்டு: நம் அண்டை நாடான நேபாளத்தில், கடந்த ஆண்டு நடந்த இளம் தலைமுறையினரின் போராட்டங்களை ஒடுக்கிய குற்றச்சாட்டிற்காக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சர்மா ஒலி சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து மூன்றாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் முன்னாள் பிரதமர்களான ஷேர் பகதுார் தேவுபா, சர்மா ஒலி மற்றும் புஷ்ப கமல் தஹால் ஆகியோருக்கு எதிரான விசாரணையை, அந்நாட்டின் பணமோசடி விசாரணை துறை தீவிரப்படுத்தியுள்ளது.
