டிரம்ப் ஆட்சிக்கு முந்தைய காலத்திற்கு உலகம் இனி திரும்பாது; சொல்கிறார் கனடா பிரதமர்
டிரம்ப் ஆட்சிக்கு முந்தைய காலத்திற்கு உலகம் இனி திரும்பாது; சொல்கிறார் கனடா பிரதமர்
ADDED : ஜன 21, 2026 08:59 AM

டாவோஸ்: 'அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய நிர்வாக அமைப்பு பிளவை சந்தித்து வருகிறது. உலகம் மீண்டும் டிரம்ப் ஆட்சிக்கு முந்தைய நிலைக்குத் திரும்பாது,' என்று கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸில் நடந்து வரும் உலகப் பொருளாதார மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உரையாற்ற இருக்கிறார். இதற்கு முன்னதாக, கனடா பிரதமர் மார்க் கார்னி உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது; அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய நிர்வாக அமைப்பு பிளவை சந்தித்து வருகிறது. இது பெரும் நாடுகளுக்கு இடையிலான போட்டி மற்றும் விதிகள் அடிப்படையிலான மறைந்து வரும் ஒழுங்கினால் ஏற்படுகிறது. இது மாற்றம் அல்ல. ஒரு பிளவின் மத்தியில் இருக்கிறோம். உலகம் மீண்டும் டிரம்ப் ஆட்சிக்கு முன் இருந்த நிலைக்குத் திரும்பாது.
பழைய விதிமுறை அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு மற்றும் அமெரிக்க மேலாதிக்கம் ஆகியவற்றால் கனடா பயனடைந்தது. நிலையான நிதி அமைப்பு மற்றும் கூட்டுப் பாதுகாப்பு போன்ற நன்மைகளை வழங்கியது. தற்போது சக்திவாய்ந்த நாடுகள் தங்கள் நலன்களுக்காகப் பொருளாதார ஒருங்கிணைப்பை மேற்கொள்ள, தீவிரமான அதிகாரப் போட்டியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றன. நடுத்தர நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.
கிரீன்லாந்து மீதான அமெரிக்கக் கட்டுப்பாட்டை அமல்படுத்தப்போவதாக டிரம்ப் விடுத்த மிரட்டல்கள் டாவோஸ் கூட்டத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இதற்குப் பதிலளித்த கனடா பிரதமர் கார்னி, 'கனடா, கிரீன்லாந்து மற்றும் டென்மார்க்குடன் உறுதியாக நிற்கிறது. கிரீன்லாந்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் அவர்களின் உரிமையை முழுமையாக ஆதரிக்கிறது,' என்று கூறினார்.
அதிபர் டிரம்ப் கனடாவை அமெரிக்காவின் 51வது மாநிலம் என்று குறிப்பிட்டிருந்த நிலையில், கனடா பிரதமர் இதுபோன்று பேசியுள்ளார்.

