தங்கத்தை விற்று பணம் பெற சீனாவில் உலகின் முதல் ஏ.டி.எம்.,
தங்கத்தை விற்று பணம் பெற சீனாவில் உலகின் முதல் ஏ.டி.எம்.,
ADDED : ஏப் 22, 2025 01:52 AM

ஷாங்காய்: தங்கத்தை பணமாக்குவதில் இதுவரை இல்லாத புதுவரவாக, உலகின் முதல் தங்க ஏ.டி.எம்., சீனாவின் ஷாங்காய் நகரில் அமைக்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை விண்ணை முட்டிவரும் நிலையில், தங்களிடம் உள்ள பழைய தங்க நகை, நாணயத்தை விற்று பணமாக்க பலரும் விரும்புகின்றனர். ஆனால், நஷ்டமின்றி தங்கத்துக்கு ஈடான முழுப்பணமும் எங்கும் கிடைக்காது என்பதால், தங்கத்தை விற்க தயக்கம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்கும் வகையில், நம் அண்டை நாடான சீனாவின் ஷாங்காய் நகரில், 'சைனா கோல்டு' என்ற நிறுவனம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தங்க ஏ.டி.எம்., சீன மக்களிடம் அமோக ஆதரவைப் பெற்றுள்ளது. இந்த இயந்திரத்தில், நகையை வைத்தால், அதை எடை போட்டு, எவ்வளவு என்பதை திரையில் காட்டும்.
அதை ஏற்று ஒப்புதல் அளித்தால், தங்கம் உருக்கப்பட்டு, அதற்குரிய பணம், வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு விடும்.
சீன கிங்ஹுட் குழுமம் பராமரிக்கும் இந்த தங்க ஏ.டி.எம்., தங்கத்தின் தரத்தை பரிசோதித்து, அதற்கு ஈடான பணத்தை வங்கிக் கணக்கில் வரவு வைக்கும்.
ஷாங்காய் வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த ஏ.டி.எம்.,மில் தங்கள் தங்கத்தை விற்று பணம்பெற நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.
தினசரி தங்கம் விலையை ஏ.டி.எம்., திரையில் அறிவிப்பதாகவும், தங்கத்தை விற்றால் எங்கு கூடுதல் பணம் கிடைக்கும் என்று மக்கள் அலையாமல், அன்றைய விலையில் தங்கத்தை இந்த ஏ.டி.எம்.,மில் வைத்து, தங்கள் வங்கிக் கணக்கில் உடனடியாக பணத்தைப் பெறலாம் என்றும் சைனா கோல்டு நிறுவனம் தெரிவித்துஉள்ளது.