உலகின் முதல் டிரில்லியனர் பட்டியல்; இந்தியருக்கு எந்த இடம்; ஆய்வு நிறுவனம் தகவல்
உலகின் முதல் டிரில்லியனர் பட்டியல்; இந்தியருக்கு எந்த இடம்; ஆய்வு நிறுவனம் தகவல்
ADDED : செப் 10, 2024 03:21 PM

துபாய்: லட்சாதிபதி, கோடீஸ்வரர் வரிசையில், மில்லியனர், பில்லியனர் என்பதை கடந்து இப்போது டிரில்லியனர் வரும் காலம் நெருங்கி விட்டது. உலகின் முதல் டிரில்லியனர், எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் என்கிறது ஆய்வு நிறுவனம்.
இந்திய எண் முறைப்படி, லட்சம், கோடி என்றால் மட்டுமே நமக்குத்தெரியும். மில்லியன், பில்லியன் என்பது, மேற்கத்திய நடைமுறை. மில்லியன் என்றால், 10 லட்சம், பில்லியன் என்றால், 100 கோடி. ஒரு டிரில்லியன் என்றால், ஒரு லட்சம் கோடி.
நம் நாட்டில் லட்சாதிபதி, கோடீஸ்வரர் என்பதை, மேற்கத்திய நாடுகளில், மில்லியனர், பில்லியனர் என்பர். இப்போது டிரில்லியனர் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.தற்போதுள்ள சொத்து மதிப்பு, வருவாய் ஆகியவற்றை கணக்கிட்டால், எக்ஸ் தளம், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளர் எலான் மஸ்க், 2027ம் ஆண்டில் உலகின் முதல் டிரில்லியனர் ஆகி விடுவார்.
இதை துபாயை சேர்ந்த இன்பார்மா கனெக்ட் என்ற ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அவரது தற்போதைய சொத்து மதிப்பு 241 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.இதே கணக்குப்படி, உலகின் இரண்டாவது டிரில்லியனர் ஆக, இந்தியர் ஒருவர் வருவார் என்கிறது அந்த நிறுவனம்.
அதானி நிறுவன தலைவர் கவுதம் அதானி, 2028ல் டிரில்லியனர் ஆகி விடுவார் என்பது கணக்கு. பேஸ்புக் அதிபர் மார்க் உட்பட மேலும் 3 பேர், 2030ம் ஆண்டுக்குள் டிரில்லியனர் ஆகி விடுவர் என்றும் அந்நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.