இந்தியா தலைமையேற்று செயல்பட வேண்டும் டபிள்யு.டி.ஓ., இயக்குநர் ஜெனரல் விருப்பம்
இந்தியா தலைமையேற்று செயல்பட வேண்டும் டபிள்யு.டி.ஓ., இயக்குநர் ஜெனரல் விருப்பம்
UPDATED : ஜூன் 05, 2025 05:18 PM
ADDED : ஜூன் 05, 2025 12:15 AM

பாரிஸ்: மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியுஷ் கோயல், அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். அங்கு, ஆஸ்திரேலியா தலைமையில் இந்தியா, சிங்கப்பூர் உட்பட 25 நாடுகளின் வர்த்தக அமைச்சர்கள், உலக வர்த்தக அமைப்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து விவாதித்தனர். இதில் பங்கேற்ற உலக வர்த்தக அமைப்பின் இயக்குநர் ஜெனரல் என்கோசி ஒகோன்ஜோ-இவேலா, பியுஷ் கோயலை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:
உலக வர்த்தக அமைப்பின் 14வது அமைச்சரவை மாநாடு, மத்திய ஆப்ரிக்க நாடான கேமரூனில் அடுத்தாண்டு மார்ச் மாதம் 26 முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில், இந்தியா தலைமைத்துவத்துடன் செயல்பட விரும்புகிறோம். சிறப்பாக செயல்பட்டு வரும் இந்தியா, வளரும் நாடுகளுக்கான வளர்ச்சி வாய்ப்புகளுக்கு வழியேற்படுத்தி தர வேண்டும். உலக வர்த்தக அமைப்பின் 166 உறுப்பினர்களில் 126 நாடுகள், வளர்ச்சிக்கான முதலீட்டு வாய்ப்பு ஒப்பந்தத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதில், 90 வளர்ந்து வரும் நாடுகள் உள்ளடங்கும்; இந்தியாவும் ஆதரவளிப்பது சிறப்பானதாக இருக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.