ADDED : ஜூலை 09, 2025 07:12 AM

சனா: ஏமன் நாட்டவரை கொலை செய்த வழக்கில் சிக்கி உள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவுக்கு, வரும் 16ல் துாக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்தவர், நர்ஸ் நிமிஷா பிரியா, 38. இவர் மேற்காசிய நாடான ஏமனில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.
கடந்த 2014ல், அவரது கணவர் மற்றும் பெண் குழந்தை இந்தியாவுக்கு திரும்பினர். இதற்கிடையே, ஏமனில் உள்நாட்டு போர் ஏற்பட்டதால், நிமிஷா பிரியாவால் நாடு திரும்ப முடியவில்லை.
ஏமனைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து மருத்துவமனை துவங்குவதற்கு முயற்சி செய்தார். அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்னையில், மஹ்தியை கொலை செய்ததாக நிமிஷா பிரியா, 2017ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
மரண தண்டனையில் இருந்து மீட்பதற்காக, நிமிஷா பிரியாவின் தாய் பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், அவற்றுக்கு பலன் கிடைக்கவில்லை.
இந்நிலையில், வரும் 16ம் தேதி நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாக, ஏமன் சிறை நிர்வாகம் கூறியுள்ளது.