திருப்பம்! வங்கதேச தலைமை ஆலோசகராக யூனுஸ் நீடிப்பு : அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு
திருப்பம்! வங்கதேச தலைமை ஆலோசகராக யூனுஸ் நீடிப்பு : அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவு
ADDED : மே 25, 2025 01:50 AM

டாக்கா: வங்கதேசத்தில் தலைமை ஆலோசகர் பதவியில் இருந்து முஹமது யூனுஸ் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அந்த பதவியில் அவர் தொடர்ந்து நீடிப்பார் என அமைச்சரவையில் உள்ள ஆலோசகர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
வங்கதேசத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றம் காரணமாக, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது.
அவருக்கு ராணுவ தளபதி வாக்கர் - உஸ் - ஜமான் முழு ஆதரவு அளித்தார். இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை முஹமது யூனுஸ் எடுத்த நிலையில், அவருக்கும், தளபதி வாக்கருக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டது.
இடைக்கால அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற விஷயத்தில் மோதல் அதிகரித்தது. வங்கதேச தேசியவாத கட்சியும், யூனுசுக்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தது.
பிரமாண்ட பேரணி
இந்த சூழலில், தலைமை ஆலோசகர் பதவியை முஹமது யூனுஸ் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியானது. அரசியல் கட்சிகள் பொதுவான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியதால், ராஜினாமா செய்ய உள்ளதாக யூனுஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், அவரது ஆதரவாளர்கள் யூனுஸ் ராஜினாமா செய்வதை விரும்பவில்லை. அவர்கள் டாக்காவின் நேற்று பிரமாண்ட பேரணி நடத்தினர்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவரே தலைமை ஆலோசகராக நீடிக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர்.
இது தொடர்பான சுவரொட்டிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்தன. இந்த சூழலில், வங்கதேச அரசியல் ஆலோசகர்கள் அடங்கிய அமைச்சரவை கூட்டம் முஹமது யூனுஸ் தலைமையில், டாக்காவில் நேற்று நடந்தது.
அப்போது, நாட்டில் நிலவும் அரசியல் நெருக்கடி குறித்தும், தேர்தலை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில், மாணவர்கள் அமைப்பின் வங்கதேச கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்துக்குப் பின், திட்டமிடல் ஆலோசகர் வஹிதுதீன் மஹ்மூத் கூறுகையில், “நாட்டில் நிலவும் நெருக்கடிகளுக்கு நடுவே, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை திறம்பட செய்து வருகிறோம்.
''தலைமை ஆலோசகர் யூனுஸ் எங்கள் வழிகாட்டியாக இருந்து வழி நடத்தி வருகிறார்.
''பல சவால்களையும் கடந்து தான் நாங்கள் பணி செய்து வருகிறோம். கூட்டத்தின்போது, தலைமை ஆலோசகரின் ராஜினாமா குறித்த பேச்சு எழுந்தது. அந்த பதவியில் அவர் நீடிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்தினோம். அவர் அதை ஏற்றுக் கொண்டார். இடைக்கால அரசின் தலைவராக அவர் நீடிப்பார்,” என்றார்.
விவாதிப்பு
ஆலோசகர்களுடனான கூட்டத்துக்குப் பின் முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாத கட்சி மற்றும் ஜமாத் - இ - இஸ்லாமி அமைப்பின் தலைவர்களை முஹமது யூனுஸ் சந்தித்துப் பேசினார்.
அவர்களுடன் தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து அவர் விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.