அதிபர் டிரம்பின் அமைதி திட்டம் கை கொடுக்கவில்லை; உக்ரைன் அதிபர் சொல்வது இதுதான்!
அதிபர் டிரம்பின் அமைதி திட்டம் கை கொடுக்கவில்லை; உக்ரைன் அதிபர் சொல்வது இதுதான்!
ADDED : டிச 10, 2025 09:35 AM

கீவ்: உக்ரைன் அமைதித் திட்டத்திற்கு பதிலளிக்க அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அமெரிக்கா பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதாக உக்ரைன் அதிபர் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்.
அதே நேரத்தில் உக்ரைன் அமைதி திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு அதிபர் டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஜெலன்ஸ்கி மீது விரத்தியையும் டிரம்ப் வெளிப்படுத்தி இருந்தார். இந்த சூழலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது: ரஷ்யா எங்களிடம் நிலத்தை விட்டுக் கொடுக்குமாறு வலியுறுத்தி வருகிறது. நாங்கள் ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
எதையும் விட்டுக்கொடுக்க விரும்பவில்லை. அதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். உக்ரைனின் சட்டம், அதன் அரசியலமைப்பு மற்றும் சர்வதேச சட்டம் எந்த சலுகைகளையும் அனுமதிக்காது. வெளிப்படையாகச் சொன்னால், நிலத்தை விட்டுத்தர எங்களுக்கு தார்மீக உரிமை இல்லை. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

