ஜூன் 17, 2016

பெங்களூரு : கலார்நவ விழாவின் 10ம் ஆண்டு விழா பெங்களூருவில் உள்ள தயானந்த சாகர் கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணலீலாநவ என்னும் தலைப்பில் நாட்டிய நாடகம் நடத்தப்பட்டது. சுமார் 170 நடன கலைஞர்கள், 50 க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்ற இந்த நாட்டிய நாடகத்தில் கிருஷ்ணரின் பிறப்பு முதல் பாகவதம் வரையின் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் காட்சிப்படுத்தப்பட்டன். சுமார் 4 மணிநேரம் நடைபெற்ற இந்த நாட்டிய நாடகத்தை அரங்கு நிறைந்த கலா ரசிகர்கள் கண்டு மகிழ்ந்தனர். பரதநாட்டியம், குச்சிப்புடி உள்ளிட்ட 5 விதமான கலாச்சார நடனங்கள் காட்சிகளில் இடம்பெற்றிருந்தது இந்நிகழ்ச்சியின் தனிச்சிறப்பாக அமைந்திருந்தது. பானுமதி மற்றும் ஹீலா சந்திரசேகரின் புஷ்பாஞ்சலியுடன் நிகழ்ச்சி துவங்கியது. மூத்த கலைஞர்களால் தில்லானா அரங்கேற்றப்பட்டு, நிகழ்ச்சி நிறைவு பெற்றது. மேடை வடிவமைப்பும், கலைஞர்களின் வண்ணமயமாக ஆடை வடிவமைப்பும் அனைவரையும் பெரிதும் கவர்ந்தது.
