/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
உத்தர சுவாமிமலை கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
/
உத்தர சுவாமிமலை கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
அக் 30, 2025

புதுதில்லி ஆர். கே. புரத்தில் உள்ள சிறப்பு பெற்ற உத்தர சுவாமிமலை (மலை மந்திர்) ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி கோவிலில் 81வது கந்த சஷ்டி விழா, பத்து நாட்கள் மிகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முதல் நாள் (அக்-20) விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. பத்து நாட்கள் நடந்த கந்த சஷ்டிவிழாவில், தினமும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், ஹோமங்கள் அலங்காரம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றன.
அக்-27 - சூரசம்ஹார நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சூரசம்ஹாரத்தைக் கண்டு முருகப் பெருமானை வழிபட்டனர். விழாவில், 7ம் நாளன்று (அக்-28) விழா நிறைவாக உற்சவர் திருக்கல்யாணம் நடைபெற்றது. மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுவாமிநாதருக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு வில்வ இலைகளால் அர்ச்சனை நடைபெற்றது. மண்டபத்தில் உற்சவர் முருகப்பெருமான் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார்.
திருக்கல்யாணத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயில் மண்டபத்தில் குவிந்தனர். திருக்கோவில் நிர்வாகம் சார்பில் மற்றும் பக்தர்கள் பட்டு வஸ்திரங்கள் மலர்கள், பழங்கள், மஞ்சள், குங்குமம் தாலிக்கயிறு உள்ளிட்ட பூஜை பொருட்களை கொண்டு வந்து சமர்ப்பித்தனர்.
பக்தர்களை கவரும் வகையில் பிரதி தினமும், மாலையில் நாட்டியம், நாம சங்கீர்த்தனம், கர்நாடக இசைக் கச்சேரிகள் மற்றும் திருப்புகழ் பஜனை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மூத்த மற்றும் வளரும் இசைக் கலைஞர்கள் ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். இசைக் கலைஞர்களை ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி சேவா சமாஜம் சார்பில் பாராட்டி கெளரவித்தனர்.
விழாவின் நிறைவு நாள் (அக்-29) நிகழ்வாக, ' தீர்த்தவாரி விடையாற்றி உற்சவம்' , மூலவருக்கு காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிசனம் செய்தனர். கந்த சஷ்டி விழா,சிறந்த முறையில் நடந்தேற உதவிய அனைவருக்கும் ஸ்ரீ சுவாமிநாத ஸ்வாமி சேவா சமாஜம் சார்பில் நன்றியை தெரிவித்தனர்.
- புதுடில்லியில் இருந்து நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்
