
புதுதில்லி கே.ஆர்.ஜெ இசைப்பள்ளியின் 30 ஆம் ஆண்டு விழா அருணா அசஃப் அலி
சாலையிலுள்ள ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயத்தில் 21.4.2024 ஞாயிற்றுக்
கிழமையன்று நடைபெற்றது. சம்பிரதாய கணபதி பூசையுடன் பள்ளி மாணவர்கள்
இறைவணக்கத்தை தொடர்ந்து, மதுரை சத்குரு சங்கீத வித்யாலயா இசை கல்லூரியின்
முன்னாள் முதல்வர் முனைவர் லட்சுமி பொடுவால் குத்துவிளக்கேற்றி விழாவைத்
தொடங்கி வைத்தார்.
இசையறிஞர் முனைவர் ராதா வெங்கடாச்சலம் மற்றும் தில்லித் தமிழ்ச் சங்க
முன்னாள் தலைவர் இந்து பாலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து
கொண்டனர்.
கே.ஆர் ஜே.பள்ளி மாணவர்கள் மோக்க்ஷா, மஞ்சுநாத் ரெட்டி, நவ்யா அனன்யா கண்ணன், நித்ய ப்ரியா, சாய் ஸ்ரீ ஷா, ஹர்ஷிதா, செந்தில்குமார் , அகிலா பாலாஜி , சந்தியா, ஆகியோர் பாடினார்கள். பி ஸ்ரீ நிவாஸ் புல்லாங்குழல் வாசித்தார்.
தொடர்ந்து சங்கீத விதூஷி நளினி பாஸ்கர், சாய்சுந்தர், பிரஷாந்த் கோபிநாத்
பை, ஸ்வர்ணலதா சுப்பிரமணியம் ஆகியோரின் கச்சேரி நடைபெற்றது. அரவிந்த்
நாராயணனின் வயலின் விக்னேஷ் ஜெயராம் மிருதங்கம் வாசித்தார்கள்.
இதையடுத்து விழாவின் அடுத்த பகுதியாக கலைஞர்கள் சிறப்பு செய்யப்பட்டனர். விதூஷி ஸ்வர்ணலதா சுப்பிரமணியத்துக்கு சங்கீத சேவா நிரதா என்ற விருதும், முனைவர் பிரஷாந்த் கோபிநாத் பை மற்றும் சாய் சுந்தருக்கு நாதலய வித்வான் மணி விருதும், மிருதங்க கலைஞர் வெற்றி பூபதிக்கு தாள லய வித்வான் மணி விருதும் வழங்கப்பட்டது . மற்றும் பள்ளி மாணவர்கள் சாய் ஸ்ரீ ஷா, நித்ய ப்ரியா, ஹர்ஷிதா விற்கு யுவபுரஸ்கார் விருதும் வழங்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர் லட்சுமி பொடுவால் பேசுகையில், இசையின் பெருமைகளை
எடுத்துச் சொல்லி, 'இசைதான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து
தில்லிக்கு வந்தவர்களை ஒன்று சேர்த்தது' என்றார். வாழ்த்துரை வழங்கிய
தில்லித் தமிழ்ச் சங்க முன்னாள் தலைவர் இந்துபாலா, இசைக்கு தன் வாழ்நாளை
அர்ப்பணித்து வரும் நிர்மலா பாஸ்கரை பாராட்டினார். முனைவர் ராதா
வெங்கடாசலம் நிர்மலா பாஸ்கரின் இசை அர்ப்பணிப்பை உயர்வாக குறிப்பிட்டதுடன்
இந்த விழாவிற்கு பின்புலமாக செயல்பட்ட மதுரை கணேசன், தில்லி முத்துவேல்,
அகிலா பாலாஜி ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்தார்.
விழாவில் கலந்து கொண்ட தில்லிக் கம்பன் கழகத் தலைவர் கே வி கே பெருமாள் 'இசையால் கிடைக்கக் கூடிய பலன்கள் பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும் விரிவாக பேசினார். தமிழின் அரிய பொக்கிஷங்களாகத் திகழக் கூடிய கம்பராமாயணம், திருக்குறள் போன்றவற்றை பாரம்பரிய இசையுடன் குழந்தைகளுக்குக் கற்றுத்தரவேண்டும் என இசைகற்பிப்பவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். இதனால், இசையும் வளரும்; தமிழும் வளரும்' என்றார்.
காமாட்சி அம்மன் கோவில் நிர்வாகி பொள்ளாச்சி கணேசன், தில்லி பல்கலைகழக
இசைபிரிவைச் சார்ந்தமுனைவர் மணிகண்டன் , ரோகிலா, தில்லித் தமிழ்ச்
சங்கசெயலர் இரா.முகுந்தன், இணை செயலர் உமா சத்யமூர்த்தி , ஹயக்ரீவா குரு
சரண், கர்நாடக சங்கீத சபா எச்.எஸ்.சுப்பிரமணியன், மகேந்திரன், சங்கீத
விதூஷி ஜெயந்தி அய்யர் , சமூக ஆர்வலர் கண்ணப்பன் மற்றும் ஏராளமானோர்
விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட பலரும் கே.ஆர்.ஜே. இசைப்பள்ளியின் அமைப்புச் செயலாளர் முனைவர் நிர்மலா பாஸ்கரன் இசைக்கு ஆற்றி வரும் சேவையைப் பாராட்டி, அவருக்குப் பொன்னாடை அணிவித்தனர். விருது பெற்றவர்கள் ஏற்புரை வழங்கினர்.
சமூக சேவகர் மீனா வெங்கி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பங்கேற்ற
இசைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இசைப்
பள்ளியின் இணைச் செயலாளர் எஸ்.பி.முத்துவேல் நன்றி கூற விழா இனிதே நிறைவு
பெற்றது.
- நமது செய்தியாளர் மீனாவெங்கி