நொய்டா கோவிலில் ----முருகனின் மறு பெயர் அழகு…இசை கச்சேரி
நொய்டா கோவிலில் ----முருகனின் மறு பெயர் அழகு…இசை கச்சேரி
ஜூலை 06, 2026

'முருகனின் மறு, பெயர் அழகு'என்ற தலைப்பில் நடைபெற்ற முருகப்பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு கர்நாடக இசைக்கச்சேரியை சென்னையைச் சேர்ந்த பவ்யா ஹரி சிறப்பாக வழங்கினார். அவருக்கு வயலினில் அரவிந்த் நாராயணன் மற்றும் மிருதங்கத்தில் விக்னேஷ் ஜெயராமன் சிறப்பாக பக்கவாத்தியம் வாசித்தார்கள்.
இந்த இசை நிகழ்ச்சியை ராமகிருஷ்ணாபுரம் தென்னிந்தியர் சங்கம், புது தில்லி மற்றும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் (VPS), நொய்டா ஆகியவை இணைந்து நொய்டா, செக்டர்-62 அமைந்துள்ள ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா ஆலய வளாகத்தில், ஞாயிற்றுக்கிழமை 5 ஜூலை 2026 அன்று நடந்தது .
பவ்யா ஹரி, ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர் இயற்றிய கமாஸ் வர்ணத்துடன் கச்சேரி தொடங்கினார். அதைத் தொடர்ந்து முத்துசுவாமி தீட்சிதர் இயற்றிய நாட்டை ராகத்தில் 'மகாகணபதிம்'என்ற விநாயகர் கீர்த்தனையை இனிமையாகப் பாடினார்.
அதன்பின் கரகரப்ரியா ராகத்தில் அழகிய ஆலாபனையை வழங்கி, பாபநாசம் சிவன் இயற்றிய 'செந்தில் ஆண்டவனே' என்ற பிரபல கீர்த்தனையைப் பாடினார். இக்கீர்த்தனையில் சிறிய நிரவல் வழங்கி, 'பாடலின் பக்தி ரசத்தை மேலும் உயர்த்தினார் .
அடுத்து ஔவையார் இயற்றிய விருத்தம் பாடி அடாணா மற்றும் கதனகுதூகலம் ராகங்களில் திருப்புகழ் பாடப்பட்டது. பின்னர் நாட்டைக்குறிஞ்சி மற்றும் இந்தோளம் ராகங்களில் வழங்கிய கந்தர் அனுபூதி மனதை நெகிழச் செய்யும் வகையில் அமைந்தது.
இக்கச்சேரியின் சிறப்பம்சமாக 71-வது மேளகர்த்தா ராகம் கோசலம் ராகத்தில் விரிவான ஆலாபனையை வழங்கினார். விவாதி ராகத்தின் தனித்துவமான அம்சங்களை அழகாக வெளிப்படுத்திய அவர், கோடீஸ்வர ஐயர் இயற்றிய 'கா குஹா சண்முகா'என்ற கீர்த்தனையை சிறப்பாக பாடினார்.
முக்கிய அம்சமாக ஷண்முகப்ரியா ராகத்தில் பாபநாசம் சிவன் இயற்றிய 'பார்வதி நாயகனே' என்ற கீர்த்தனையை வழங்கினார். அதற்கு முன்னதாக அளித்த சுருக்கமான ஆலாபனை, பாடலின் சிறப்பை மேலும் உயர்த்தியது.
வயலினில் அரவிந்த் நாராயணன், கரஹரப்ரியா, கோசலம் மற்றும் ஷண்முகப்ரியா ஆகிய ராகங்களில் சிறப்பான வாசிப்பால் கச்சேரிக்கு மெருகூட்டினார். மிருதங்கக் கலைஞர் விக்னேஷ் ஜெயராமன் முழு கச்சேரியிலும் உற்சாகமானதாக ஒத்துழைப்பை வழங்கியதுடன், அவரது தனி ஆவர்த்தனம் ரசிகர்கள் பாராட்டைப் பெற்றது.
கச்சேரியின் நிறைவுப் பகுதியில் மீரா பஜன், அமிர்தவர்ஷிணி, தர்பாரி கானடா ஆகிய ராகங்களில் அமைந்த பாடல்கள் மற்றும் பேஹாக், சிந்துபைரவி ராகங்களில் அமைந்த ராகமாலிகை விருத்தம் ஆகிய 'துக்கடாக்கள்' ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் ரசித்தார்கள்.
முருகப் பெருமானை மையமாகக் கொண்ட பல அரிய படைப்புகளை தேர்ந்தெடுத்து வழங்கியதன் மூலம், 'முருகனின் மறுபெயர் அழகு'என்ற கச்சேரி தலைப்பை பவ்யா ஹரி முழுமையாக நியாயப் படுத்தினார். அவரது பக்தி பூர்வமான இசை நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஆன்மீகமும் இசை நயமும் நிறைந்த அரிய அனுபவத்தை வழங்கியது.
ராமகிருஷ்ணாபுரம் தென்னிந்திய சங்கத்தின் துணைத் தலைவர் எஸ். கிருஷ்ணசுவாமி கலைஞர்களை அறிமுகப்படுத்தினார். இசை நிகழ்ச்சியை பற்றி முன்னணி பஜனை பாடகர் ஜெ. ராமகிருஷ்ணன் வழங்கினார். கலைஞர்களை ஷண்முகானந்தா சங்கீத சபையின் நிர்வாக குழு உறுப்பினர் திருமதி ஸ்வப்னா சேஷாத்ரி, வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் உறுப்பினர்களான கே. ராஜேந்திரன் மற்றும் வி. வெங்கட்ராமன் ஆகியோர் இணைந்து கௌரவித்தனர்.
வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் சார்பில் ஆர். ராமசேஷன் மற்றும் நீலா ராஜேந்திரன், ஸ்வப்னா சேஷாத்ரியை பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். நொய்டா மற்றும் அண்டை பகுதிகளில் இருந்து இசை ஆர்வலர்கள் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் எஸ்.வெங்கடேஷ்
