மார் 18, 2026

லோக்கலாமஞ்சில் பட்டிமன்றம்
தலைநகர் தில்லியில் லோதி ரோடு லோக்கலாமஞ்ச் வாசுகி அரங்கில் கடந்த சனிக்கிழமை காலை பட்டிமன்றம் நடைபெற்றது. லோக்கலாமஞ்சுடன் வாகீஸ்வர கலாசார அமைப்பும் இணைந்து இந்த நிகழ்ச்சியைஏற்பாடு செய்திருந்தார்கள்.
இன்றைய அவசர உலகில் மகிழ்ச்சியான மனநிலைக்கு பெரிதும் காரணம் தன்னெழுச்சியா இல்லை சுற்றுச்சூழலா என்ற தலைப்பில் அணிக்கு மூவராக பெண்கள் கலந்து கொண்டு அருமையாக பேசினார்கள். நாடாளுமன்ற மக்களவை இணை இயக்குனர் ராஜ்குமார் பாலா நடுவராக அமர்ந்து வழி நடத்தினார்.
அபர்ணா ரவி பேசுகையில் நமது வாழ்க்கை முறம் போல தேவை அற்றதை விலக்கி வாழ வேண்டும். சல்லடை போன்று நல்லவற்றை கீழே தள்ளி குப்பைகளை கையில் ஏந்துவது போல் கூடாது என்றார். அதே போல் ஜான்சி கடிகாரம் அலாரம் அடித்தாலும் தன்னெழுச்சி இருந்தால்தான் எழுவது சாத்யம் என்றார். மாலதி, ஒருதாய் பெற்ற குழந்தைகள் ஆனாலும் எண்ணங்கள் மாறுபடுகின்றன. தன்னெழுச்சிதான் ஒருவரை வாழ்வில் உயர்த்துகிறது என்றார்.அடுத்த அணியில் செல்வி சுற்றுச்சூழல் ஒருவரை உந்துவிசையில் உயர்த்துகிறது என்றார். ஸ்ரீலஸ்ரீ நிலவு, நட்சத்திரத்தை உதாரணம் காட்டினார். இறுதி பேச்சாளர் உமா ராமாயண கதாபாத்திரங்களே சுற்றுச்சூழலால் ராமனை உயர்த்தியது என்று உரக்கச் சொன்னார். நடுவர் பலவற்றையும் ஆராய்ந்து தன்னெழுச்சியே மகிழ்ச்சியான மனநிலைக்கு காரணம் என்று தீர்ப்பை சொன்னார்.
உச்சநீதிமன்ற வழக்குரைஞர் மோகனா பேச்சாளர்கள் அனைவரையும் கெளரவித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கலகலப்பாக நடைபெற்ற பட்டிமன்றம், மக்கள் பெருமளவு கலந்து கொண்டு ரசித்தனர்.
- டில்லியில் இருந்து நமது செய்தியாளர் மீனா வெங்கி
