
புது தில்லி : கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு ஷாலிமார் பாக்கில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சங்காபிஷேகம் மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மாலை 4.30 மணிக்கு ஸ்ரீ விக்னேஷ்வர் பூஜையுடன் தொடங்கியது. இதையடுத்து, சங்கல்பம், கலச ஸ்தாபனம், ஸிவாஷ்டோத்தர நாம அர்ச்சனை மற்றும் லகுன்யாச ஏகாதச ருத்ர ஜப பாராயணம், ஸ்ரீவித்யா உபாசகர் எஸ்.கே. மூர்த்தி மற்றும் சுவாமிநாத சாஸ்திரிகள் தலைமையில் நடந்தது. ரித்விக்குகள் இதில் பங்கேற்று ருத்ர பாராயணம் செய்தனர். அதைத் தொடர்ந்து, ஸ்ரீ ருத்ரநாம த்ரிஸதி, புஷ்பாஞ்சலி நடைபெற்றது.
பன்னீர், சந்தனம், பால் உள்பட 11 வித அபிஷேக பொருட்களை கொண்டு சிவனுக்கு அபிஷேகம் நடந்தது.108 சங்குகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அதில் நிரப்பியிருந்த தீர்த்தங்களை கொண்டு சுந்தரேஸ்வருக்கு சிறப்பு அபிஷேகம், அதை தொடர்ந்து, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் சுந்தரேஸ்வரர் அருள்பாலித்தார்.
சங்காபிஷேகம்
கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார். அவரைக் குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள். கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார். அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர். இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.
அபிஷேகத்திற்குப் பயன்படும் பொருட்களில் மண்ணாலான கலசத்தை விட செம்பு உயர்ந்தது. செம்பை விட வெள்ளியும், அதை விட தங்கக் கலசமும் உயர்ந்தது. இவை அனைத்தையும் விட சங்கு உயர்ந்தது என சாஸ்திரம் கூறுகிறது. சங்காபிஷேகம் செய்தால் அது தேவாமிர்தத்தால் சுவாமியை அபிஷேகம் செய்வதற்கு ஒப்பானது.
- நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்