/
பிற மாநில தமிழர்
/
புதுடில்லி
/
தலைநகரில் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்
/
தலைநகரில் வேலுநாச்சியார் நாட்டிய நாடகம்
ஏப் 09, 2025

சிவகங்கை இராணி வீர மங்கை வேலு நாச்சியார் ஆட்சிக்காலம் கி.பி 1780- கி.பி 1796. சிவகங்கை தலைநகரான காளையார்கோயிலை கிழக்கிந்திய கம்பெனியின் படை முற்றுகையிட்டபோது சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதத்தேவரின் மனைவியான வேலுநாச்சியார் வீரத்தோடு எதிர்த்ததன் மூலம் தமிழக மகளிர் வீரத்தில் குறைந்தவர்கள் இல்லையென்பதை நிரூபித்தார். ஆங்கிலேய ஆதிக்கத்துக்கு எதிராக போராடி வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற பெருமையும் வேலுநாச்சியாருக்கே உரித்தாகும்.
இந்த வீரமங்கை வேலுநாச்சியாரின் வாழ்க்கை சரித்திரத்தை நாட்டிய நாடக வடிவில் தமிழக OVM தியேட்டர் ஸ்ரீ ராம் சர்மா வடிவமைத்து ஹிந்தி மொழிமாற்றம் செய்து மேடை ஏற்றினார்கள்.
சுமார் 225 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்து மறைந்த வீராங்கனை வேலுநாச்சியாரின் வாழ்க்கை பற்றிய ஆராய்ச்சியில் இருபது வருடங்கள் உழைத்து அதற்கு உயிர் கொடுத்துள்ளார். ஸ்ரீராம் அவரது மனைவி மணிமேகலை இருவரும் இந்த நாடகத்திற்கு தங்களின் காலநேரங்களை அர்ப்பணித்தது மேடையில் பளிச்சிட்டது. வேலுநாச்சியாரின் கதாபாத்திரத்தை மணிமேகலை ஏற்று அந்த வீரமங்கையை நம் கண்முன் நிறுத்தினார். ஆங்கில ஆதிக்கம் அதன் தாக்கம் வட இந்தியாவில் அதிகம் உணரப்பட்டது மேலும் சரித்திரத்தில் பதிவும் செய்யப்பட்டது.
ஆங்கிலேயர் தென்னிந்தியாவில் வந்து கட்டபொம்மன் ராஜ்யம் வரை வந்ததை படித்திருக்கிறோம். அதே நேரம் மதுரையை சுற்றியுள்ள மற்ற சமஸ்தானத்தின் பாதிப்புக்கள் அதிகம் பேசப்படவில்லை. மக்கள் பார்வைக்கு வரவும் இல்லை.
சுமார் 60 நிமிட நேரத்தில் வேலுநாச்சியாரின் வாழ்க்கையை முக்கிய நிகழ்வுகளுடன் நமது மனதில் பதியும் வண்ணம் நடமாட வைத்தார்கள். கதாபாத்திரங்கள் ஆடைகள் அருமை. நாட்டுப்புற பாடல்கள் காதிற்கு இனிமை. குயிலி மற்றும் உடையாள் கதாபாத்திரத்திரம் ஒரு முறை வந்தாலும் நீங்கா இடம் பிடித்துவிட்டார். அப்போதைய மக்களின் ராஜ விசுவாசம், நாட்டுப் பற்று சுருங்கச் சொன்னாலும் அழுத்தமாய் இருந்தது. மொத்தத்தில் தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்பதற்கேற்ப தமிழனின் சுதந்திர போராட்ட பங்களிப்பை அறிந்ததில் மகிழ்ச்சி. பெருமிதம்.
இந்த நாட்டிய நாடகம் தமிழகத்தில் பலமுறை பல ஊர்களில் நடைபெற்று உள்ளது. அதை தமிழ் பேசாத மாநிலங்களில் மொழிபெயர்த்து வழங்கியது சிறப்பு. பாராட்டவேண்டிய அம்சம். தலைநகர் தில்லியில் பாரதீய ஜனதா கட்சியின் மகளிர் பிரிவு இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நாட்டிய நாடகம் தில்லி அஜ்மீரிகேட் பிரஸ் என்க்ளேவ் பகுதியில் கேதார்நாத் சகானி அரங்கத்தில் நடந்தது.
சுதந்திரபோராட்ட பெண்வீராங்கனைகள் வரிசையில் வேலுநாச்சியாரின் நாட்டின் நாடகம் ஹிந்தி மொழிமாற்றம் செய்யப்பட்டு அரங்கேறியது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாரதீய ஜனதா கட்சி மகளிர் அணித்தலைவர் வானதி ஸ்ரீநிவாசன், தில்லி முதன் மந்திரி ரேகா குப்தா, ஒரிசா இணை முதலமைச்சர் பிரணவதி பரீந்தா, ராஜஸ்தான் இணை முதலமைச்சர் தியாகுமாரி தமிழக பாஜக அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நாச்சியார் பரம்பரையை சார்ந்த மதுராந்தகி நாச்சியார் ( சிவகங்கை சமஸ்தானம்) மற்றும் ராஜேஸ்வரி நாச்சியார் ( ராம் நாடு சமஸ்தானம்) இருவரும் கலந்து கொண்டது சிறப்பம்சம். இவர்களை மேடைக்கு அழைத்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினார்.
விழாவின் தொடக்கத்தில் தில்லி வாணி ராஜ்மோகன் குழுவினர் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் வேலுநாச்சியாரின் வலைதள புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும் நாட்டிய குழு தலைவர் ஸ்ரீ ராம் அவரது துணைவியார் மணிமேகலைக்கு பொன்னாடை போர்த்தி பாதுகாப்பு அமைச்சர் கெளரவித்தார்.
திரைப்படங்கள் பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாவதை பார்த்திருக்கிறோம். இந்த நாட்டிய நாடகம் தமிழ் ஆங்கிலம் ஹிந்தி மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது சிறப்பு.
- நமது செய்தியாளர் மீனா வெங்கி