பங்குச்சந்தையில் 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்' நிறுவனம் முறைகேடு ரூ.15 லட்சம் கோடி! வருவாய் கணக்குகளை தவறாக காட்டியாக 'செபி' குற்றச்சாட்டு
பங்குச்சந்தையில் 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்' நிறுவனம் முறைகேடு ரூ.15 லட்சம் கோடி! வருவாய் கணக்குகளை தவறாக காட்டியாக 'செபி' குற்றச்சாட்டு
UPDATED : ஜூன் 13, 2026 03:47 PM
ADDED : ஜூன் 13, 2026 03:20 PM

- நமது சிறப்பு நிருபர் -:
இந்திய பங்குச்சந்தை, 30 ஆண்டுகளில் பல பெரு நிறுவன முறைகேடுகளை சந்தித்துள்ளது. இந்த வரிசையில், 15 லட்சம் கோடி ரூபாய் வருவாயை, 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் தவறாக கணக்கு காட்டியதாக, 'செபி' எனப்படும் இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு வாரியம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, விசாரணை வளையத்துக்குள் அந்நிறுவனம் கொண்டு வரப்பட்டுள்ளது.
உலகளவில் அதிவேகமாக பணத்தை பெருக்கும் சாதனமாக இந்திய பங்குச்சந்தை திகழ்கிறது. கடந்த மே நிலவரப்படி, நம் நாட்டில் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தேவைப்படும், 'டீமேட்' கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கை, 23 கோடியை எட்டியுள்ளது. மின்னணு முறையில் பங்குகள் மற்றும் பத்திரங்களை சேமித்து வைக்க இந்த கணக்குகள் பயன்படுகின்றன.
சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடுகையில், நம் நாட்டு பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருவதால், இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்ய உள்நாட்டினரும், வெளிநாட்டினரும் ஆர்வம் காட்டுகின்றனர். அதே சமயம், தற்போதைய போர்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் முதலீட்டாளர்கள் பாதிக்கப்படக்கூடிய சூழலும் நிலவுகிறது.
இது ஒருபுறம் இருக்க, பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகள், நம் முதலீட்டாளர்களை, குறிப்பாக சிறு முதலீட்டாளர்களை பெரிதும் பாதிக்கின்றன. 30 ஆண்டுகளில், நம் பங்குச்சந்தை பல பெரு நிறுவனங்களின் முறைகேடுகளை சந்தித்துள்ளது. இந்த வரிசையில் தற்போது, 'ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ்' நிறுவனம் சேர்ந்துள்ளது.
கர்நாடகாவின் பெங்களூரைச் சேர்ந்த நகை ஏற்றுமதி நிறுவனமாக தொடங்கி, உலகளாவிய தங்க சுத்திகரிப்புத் துறையில் ஒரு முக்கிய நிறுவனமாக இது வளர்ந்தது. ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள உலகின் மிகப்பெரிய தங்கம் உள்ளிட்ட உலோகங்களை சுத்திகரிக்கும், 'வல்காம்பி' நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டதால், ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உலகளவில் பிரபலமானது.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் வெற்றி ஓட்டத்தில் தற்போது பெரிய முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையை கட்டுப்படுத்தும், 'செபி' அமைப்பு, ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம், 15 லட்சம் கோடி ரூபாய் வருவாயை மிகைப்படுத்தி காட்டியதாக குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷ் மேத்தா பங்குச்சந்தை பரிவர்த்தனையில் ஈடுபட இடைக்கால தடையும் விதித்துள்ளது. செபி நியமித்துள்ள புலனாய்வு அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும், கேட்கப்படும் கணக்கு வழக்குகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
செபியின் இந்த குற்றச்சாட்டுகளை ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனம் மறுத்துள்ளதுடன், தங்களின் நிதி அறிக்கைகள் துல்லியமானவை என்றும் கூறியுள்ளது. எனினும், முறையான விசாரணைக்கு பின்னரே இதிலுள்ள உண்மைகள் தெரிய வரும்.
இந்த விவகாரத்தால் முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு, 12,726 கோடி ரூபாய் வரை சரிந்திருக்கலாம் என, மதிப்பிடப்பட்டுள்ளது. செபியின் உத்தரவை தொடர்ந்து, சந்தையில் ராஜேஷ் எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை தினமும், 5 சதவீதம் சரிந்து வருகிறது. இந்நிறுவனத்தின், 10 சதவீத பங்குகளில் எல்.ஐ.சி., முதலீடு செய்துள்ளது. இதே போல், 'கனரா' வங்கி இந்த நிறுவனத்திற்கு, 509 கோடி ரூபாய் கடன் வழங்கியுள்ளது. அது, தற்போது வாராக்கடனாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் இந்த நேரத்தில், செபி போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளின் பலவீனம் விவாதப் பொருளாகி உள்ளது.
தணிக்கையாளர்கள், இயக்குநர்கள், நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகள் என, பல அடுக்கு கண்காணிப்பு இருந்தும், நிறுவன கணக்குகளில் உள்ள பெரிய அளவிலான முரண்பாடுகள் பல ஆண்டுகளாக கண்டறியப்படாமல் இருந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இச்சம்பவத்தை ஒரு எச்சரிக்கையாக எடுத்து, பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டும் உள்நாட்டு நிறுவனங்கள், வெளிநாட்டு நிறுவனத்தின் தணிக்கை செய்யப்பட்ட நிதி அறிக்கைகளையும் வெளியிட வேண்டும். எல்.ஐ.சி., பொதுத் துறை வங்கிகள் போன்ற பெரிய முதலீட்டாளர்கள் செபி தலையிடுவதற்கு முன்னரே, நிதி முரண்பாடுகளை கண்டறியும் தனிப்பிரிவுகளை உருவாக்க வேண்டும். தணிக்கையாளர்களை பொறுப்புக்கு உட்படுத்த வேண்டும். செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு பகுப்பாய்வு தொழில்நுட்பங்களை ஒழுங்குமுறை அமைப்புகள் பயன்படுத்த வேண்டும் போன்ற சீர்திருத்தங்களை மத்திய அரசு செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
