திருமலையில் மே மாதத்தில் மட்டும் 12 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை
திருமலையில் மே மாதத்தில் மட்டும் 12 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை
ADDED : மே 28, 2026 08:56 PM

திருமலை:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதத்தில் இதுவரையில் மட்டும் 2 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக முடி காணிக்கை கொடுத்து வருகின்றனர்.
கருப்பு தங்கம் (முடி) என்று அழைக்கப்படும் முடி காணிக்கை கொடுப்பவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக,பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கவும், வசதியாகத் தலைமுடி காணிக்கைச் செலுத்தவும் திருப்பதி தேவஸ்தானம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
மே மாதத்தில் நேற்று (மே 27) வரையில் மொத்தம் 12 லட்சத்து 43 ஆயிரத்து 63 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இது கடந்த 2024 (10,65,729), 2025 (10,18,370) ஆண்டுகளில் மே மாதத்தில் பதிவான எண்ணிக்கையை விடக் கூடுதலாகும்.
கோடை விடுமுறை மற்றும் வார இறுதி நாட்கள் போன்றவை காரணமாக, கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மே 18ம் தேதி முதல் மே 23ம் தேதி வரையில் ஒவ்வொரு நாளும் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். குறிப்பாக, மே 23ம் தேதி மட்டும் ஒரே நாளில் 57,580 பக்தர்கள் முடி காணிக்கை கொடுத்துள்ளனர்.
