UPDATED : பிப் 26, 2025 05:11 PM
ADDED : பிப் 23, 2025 11:19 PM

உள்ளாட்சியின் ஆர்வம், திருநங்கையரின் விடா முயற்சியின் பலனாக, திறக்கப்பட்ட 'அக்கா கபே'க்கள், தற்போது மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.
இயற்கையின் படைப்பில் திருநங்கையரும் ஒரு அங்கம் என்பதை, பலரும் நினைத்து பார்க்காமல் அவர்களை கேலி, கிண்டல் செய்து ரசிக்கின்றனர். இத்தகைய தொந்தரவுகளை சமாளித்து, சிலர் வாழ்க்கையில் சாதிக்கின்றனர்; பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்றனர்.
சலுகைகள்
திருநங்கையர் என்றால், பிச்சை எடுப்பர். மற்றவருக்கு தொல்லை கொடுத்து பணம் பறிப்பர் என்ற, தவறான கருத்து உள்ளது. இதை சிலர் மாற்றியுள்ளனர். தாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளனர். இவர்களுக்கு அரசும், தேவையான வசதிகளை செய்து கொடுத்துள்ளது; சலுகைகள் அளிக்கிறது.
ஹாவேரி மாவட்ட பஞ்சாயத்து, அரசு சார்ந்த 'அக்கா கபே' க்களை நிர்வகிக்கும் பொறுப்பை, திருநங்கையரிடம் ஒப்படைத்துள்ளது. இவர்களுக்கு இத்தகைய வாய்ப்பு கிடைத்திருப்பது, இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது. பத்து திருநங்கையர், அக்கா கபேவை நடத்துகின்றனர். நல்ல நிலையில் நிர்வகிக்கின்றனர்.
சுவையான, தரமான உணவு தயாரித்து வினியோகிக்கின்றனர். இதனால் மக்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த கபேவில் சுவை மற்றும் துாய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். உணவில் செயற்கையான ரசாயன சாயங்கள் பயன்படுத்துவதில்லை. பல்வேறு பணிகளுக்காக, மாவட்டத்தின் பல இடங்களில் இருந்து, கலெக்டர் அலுவலகத்துக்கு வரும் பொது மக்கள், இந்த 'அக்கா கபே' வுக்கு வந்து, சாப்பிட்டு செல்கின்றனர். 70 ரூபாய்க்கு முழு சாப்பாடு கிடைக்கிறது.
வாடிக்கையாளர்கள்
ஏழைகள், மாவட்ட நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர்கள், அரசு அலுவலக ஊழியர்கள், இங்கு சாப்பிடுகின்றனர். பார்சல் வசதியும் உள்ளது. எனவே அதிக வாடிக்கையாளர்கள் வருகின்றனர்.
ஆரம்ப நாட்களில், கபேவை நிர்வகிப்பதற்கு திருநங்கையர் பயந்தனர். மக்கள் ஏற்பரா என்ற கேள்வி எழுந்தது. அந்த பயம் இப்போது மாயமாகிவிட்டது. இவர்களுக்கு மக்களின் ஆதரவு கிடைத்ததால், நிம்மதி அடைந்துள்ளனர்.
திருநங்கையர் கூறியதாவது:
'அக்கா கபே' வுக்கு வரும் வாடிக்கையாளர்கள், எங்களிடம் எப்படி நடந்து கொள்வரோ என்ற தயக்கம் இருந்தது. ஆனால் எங்களுக்கு ஆதரவளித்துள்ளனர். எங்கள் மீது நம்பிக்கை வைத்து, வாய்ப்பளித்த மாவட்ட நிர்வாகத்துக்கு நன்றி. புது வாழ்வு கிடைத்துள்ளது.
ஒவ்வொரு வாடிக்கையாளரும், எங்களுக்கு கடவுளுக்கு சமம். எனவே தரமான, சுகாதாரமான உணவை தயாரித்து வினியோகிக்கிறோம். கபேவை சுத்தமாக நிர்வகிக்கிறோம். எங்களை பலரும் பாராட்டுகின்றனர்.
இதற்கு முன், பிச்சை எடுத்தும், பாலியல் தொழில் செய்தும் வாழ்க்கை நடத்தினோம். அனைவரும் எங்களை அலட்சியப்படுத்தினர். எங்களால் முன்னிலைக்கு வர முடியவில்லை. எங்களுக்கு மக்களும், மாவட்ட நிர்வாகமும் நல்வாழ்வு அளித்தனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்
- நமது நிருபர் -.

