/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
தன்னந்தனியாக கிணறு தோண்டிய பெண்: 'கங்கையில் குளித்தேன்' என்றும் உற்சாகம்
/
தன்னந்தனியாக கிணறு தோண்டிய பெண்: 'கங்கையில் குளித்தேன்' என்றும் உற்சாகம்
தன்னந்தனியாக கிணறு தோண்டிய பெண்: 'கங்கையில் குளித்தேன்' என்றும் உற்சாகம்
தன்னந்தனியாக கிணறு தோண்டிய பெண்: 'கங்கையில் குளித்தேன்' என்றும் உற்சாகம்
UPDATED : பிப் 26, 2025 05:11 PM
ADDED : பிப் 23, 2025 11:20 PM

பெண்கள் மனது வைத்தால் முடியாது என்பது, இந்த உலகில் எதுவும் இல்லை. ஆண்களுக்கு நிகராக அனைத்து துறைகளிலும் பெண்கள் சாதிக்க ஆரம்பித்து உள்ளனர். கஷ்டமான வேலைகளை கூட சர்வ சாதாரணமாக செய்கின்றனர். தன்னந்தனியாக கிணறு தோண்டி பெண் ஒருவர் சாதனை படைத்து உள்ளார்.
உத்தர கன்னடாவின் சிர்சி டவுன் கணேஷ்நகரை சேர்ந்தவர் கவுரி நாயக், 56. கடந்த ஆண்டு கோடை காலத்தில் மாநிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சிர்சி பகுதியும் கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையடுத்து சிர்சியில் உள்ள அங்கன்வாடி பள்ளி மாணவர்களுக்கு தண்ணீர் வழங்கும் நோக்கில், பள்ளி அருகே தனி ஆளாக கவுரி நாயக் கிணறு தோண்டினார். யாரிடமும் அனுமதி பெறாமல் கிணறு தோண்டியது சர்ச்சையை கிளப்பியது. அந்த கிணறை மூட அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
ஆனாலும் அவருக்கு ஆதரவாக பலர் பேசினர். இதனால் கிணற்று தண்ணீரை, அங்கன்வாடி பள்ளி மாணவர்கள் பயன்படுத்த அனுதி கிடைத்தது.
இந்நிலையில் தற்போது தனது வீட்டின் பின்பக்கம், தனி ஆளாக நின்று 30 அடி ஆழ கிணறு தோண்டி உள்ளார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆரம்பித்த பணியை தற்போது முடித்து உள்ளார்.
இதுகுறித்து கவுரி கூறியதாவது:
நான் நிறைய இடங்களில் கிணறு தோண்டி உள்ளேன். தனியாகவும், சிலருடன் இணைந்தும் இப்பணியை செய்து உள்ளேன்.
நான் தோண்டும் கிணற்றில் இருந்து வரும் நீரை, கங்கைக்கு இணையானது என்று கருதுகிறேன். தற்போது உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கும்பமேளா நடக்கிறது.
கோடிக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித நீராடுகின்றனர். என்னால் அவ்வளவு துாரம் செல்ல முடியாது.
இதனால் எனது வீட்டின் பின்புறம் 30 அடி ஆழ கிணறு தோண்டி உள்ளேன். அந்த தண்ணீரில் குளிப்பது கங்கையில் குளிப்பது போன்ற உற்சாகத்தை தருகிறது.
தினமும் காலை 6:00 மணி முதல் காலை 11:30 மணி வரை கிணறு தோண்டுவேன். என்னை 'பெண் பகீரதன்' என்று மக்கள் கூறுகின்றனர். பெயர், புகழுக்காக கிணறு தோண்டவில்லை. மக்களுக்காக தோண்டுகிறேன். சிறு வயதில் இருந்தே மரம் ஏறுவது எனக்கு பிடிக்கும். இப்போதும் மரம் ஏறுகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.