/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
மன உறுதியுடன் விடாமுயற்சி பெண் தொழிலதிபர்
/
மன உறுதியுடன் விடாமுயற்சி பெண் தொழிலதிபர்
ADDED : ஜூலை 28, 2025 05:08 AM

கொரோனா நேரத்தில், வேலையை இழந்தவர்கள், தொழிலை மூடியவர்களின் எண்ணிக்கை அதிகம். கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை பறித்தது. ஆனால் பெங்களூரில் பெண் ஒருவர், கொரோனா காலத்திலேயே தொழிலதிபராக வளர்ந்தார்.
சித்ரதுர்காவை சேர்ந்தவர் பாவனா. இவர் திருமணமான பின், கணவருடன் பெங்களூரில் வசிக்கிறார். டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் பட்டதாரியான இவர், எம்.பி.ஏ., முடித்த பின், ஐ.டி., நிறுவனத்தில் பணியாற்றியவர். திருமணமாகி, குழந்தைகள் பிறந்ததால், இவர்களை பராமரிக்கும் நோக்கில் பணியை விட்டு விட்டு, இல்லத்தரசியாக மாறினார். இரண்டாவது குழந்தை பிறந்து, ஓரளவு வளர்ந்ததால் சொந்தமாக தொழில் துவங்க விரும்பினார்.
தாய், பாட்டி என்ன தொழில் செய்யலாம் என, ஆலோசித்த போது குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் ஹெல்த் மிக்ஸ் தயாரிக்க முடிவு செய்தார். தன் தாயார் மற்றும் பாட்டியிடம் கற்று கொண்டது; யு டியூபில் பார்த்து என அனைத்தையும் சேர்த்து, தானே ஹெல்த் மிக்ஸ் தயாரித்தார்.
கணவரின் உதவியை எதிர்பார்க்காமல், தன் சேமிப்பில் இருந்த பணத்தை முதலீடு செய்து, நான்கு விதமான ஹெல்த் மிக்ஸ் தயாரித்து விற்க துவங்கினார். முதலில் சிறிய அளவில் துவக்கினார். நல்ல வரவேற்பு கிடைத்ததால், இயந்திரங்களை வாங்கி தொழிலை பெருக்கினார்.
பெங்களூரில் நடந்த வாக்கத்தான், மாரத்தான் நிகழ்ச்சிகளுக்கு சென்று, ஹெல்த் மிக்ஸ் குறித்து பிரசாரம் செய்தார். பூங்காக்கள் உட்பட பல்வேறு இடங்களில், 'சாம்பிள்' கொடுத்தார். தொழிலை துவக்கிய நான்கு மாதங்களில், கொரோனா ஆட்டம் ஆரம்பமானது. ஊரடங்கால் தொழிலதிபர்கள் நஷ்டம் அடைந்தனர். ஏராளமான தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன.
ஆனால் பாவனாவுக்கு, இதுவே சாதகமாக அமைந்தது.
உதவிய கொரோனா இவர் விளம்பரத்துக்காக, இலவசமாக வழங்கிய சாம்பிள் பாக்கெட்களின் மீது இருந்த மொபைல் போன் எண்ணுக்கு, பலரும் அழைப்பு விடுத்து, ஹெல்த் மிக்ஸ் ஆர்டர் செய்ய துவங்கினர். கொரோனா வராமல் தடுப்பதில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டினர். எனவே, ஹெல்த் மிக்ஸ் விற்பனை அதிகரித்தது.
இரண்டு கிலோவில் துவங்கிய விற்பனை, கொரோனா நேரத்தில், 150 கிலோவாக அதிகரித்தது. லாபமும் கிடைத்தது. வெற்றி பெற்ற பெண் தொழிலதிபராக வளர்ந்துள்ளார். கொரோனா கட்டுக்குள் வந்த பின், தொழிலை விஸ்தரிக்க திட்டமிட்டார். மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களின் கீழ் விண்ணப்பித்தார். கடனும் கிடைத்தது. தொழிலை விரிவுபடுத்தினார்.
தற்போது ஹெல்த் மிக்ஸ் மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்துக்கான பல உணவு பொருட்களை தயாரிக்கிறார். மாநில, தேசிய உணவு மேளாக்களில் இவருக்கு இலவசமாக கடை கிடைக்கிறது. மேளாக்களில் பங்கேற்றது அவரது தொழில் முன்னேற்றத்துக்கு வழி வகுத்தது.
ரோல் மாடல் மன உறுதியும், விடா முயற்சியும் இருந்தால், பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு, பாவனா சிறந்த எடுத்துக்காட்டு. பொதுவாக திருமணமாகி, குழந்தை பிறந்துவிட்டால் வாழ்க்கையின் எல்லைக்கு வந்துவிட்டோம். அனைத்தும் முடிந்துவிட்டது என, நினைக்கும் பெண்களே அதிகம். ஆனால் பாவனா திருமணமாகி, தாயான பின்னரே தொழிலதிபராக வளர்ந்தார். மற்ற பெண்களுக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
முளைகட்டிய பயிர்கள், சிறு தானியங்கள் பயன்படுத்தி ஹெல்த் மிக்ஸ் தயாரிக்கிறோம். நான்கு விதமான ஹெல்த் மிக்ஸ்கள் மூலமாக துவங்கிய, எங்களின், 'நியூட்ரியோ' நிறுவனம், இப்போது 30க்கும் மேற்பட்ட உணவு பொருட்களை தயாரிக்கிறது. www.nutriio.in வெப் சைட்டில் எங்களின் தயாரிப்புகள் குறித்து, விபரங்கள் உள்ளன. இதில் பார்த்து ஆன்லைனில் வாங்கலாம்.
'ரெடி டு குக்' உணவும் தயாரிக்கிறோம். வாழைத்தண்டில் செய்த இட்லி, தோசை மாவும் எங்களிடம் உள்ளது. 2 கிலோ விற்பனையில் துவங்கிய நியூட்ரியோ இன்று, 2,000 முதல் 3,000 கிலோ விற்பனை வரை அதிகரித்துள்ளது. ஆண்டு வருவாயை 20 லட்சம் ரூபாயில் இருந்து ஒரு கோடியாக அதிகரிக்க, இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
அமேசான், பிளிப்கார்ட் உட்பட பல்வேறு ஆன்லைன் தளங்களிலும், எங்களின் தயாரிப்புகள் கிடைக்கும். மென் பொறியாளரான என் கணவர் ராஜா தீபக்கும், எனக்கு உதவுகிறார். கனடா, சிங்கப்பூரிலும் எங்களுக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். அமெரிக்காவிலும் விற்பனை செய்ய பேச்சு நடக்கிறது.
எங்கள் தயாரிப்புகளுக்கு தேவையான பயறுகள், சிறு தானியங்களை விவசாயிகளிடம் இருந்து வாங்குகிறோம். ஆர்வம் உள்ள விவசாயிகளுக்கு தொழிற் பயிற்சி அளிக்கிறோம். என்னை போன்று புதிதாக தொழில் துவங்க ஆர்வம் காட்டும் பெண்களுக்கு உதவுகிறேன். பெண்கள் தங்கள் வீட்டில் தயாரித்து கொண்டு வரும் பொருட்களை பேக்கிங் செய்து, பிராண்டிங் செய்து தருகிறோம். சிறிய அளவில் துவங்கிய தொழில், இன்று இந்த அளவுக்கு வளர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -