/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
பெண்களுக்காக பெண்களே நடத்தும் பள்ளி
/
பெண்களுக்காக பெண்களே நடத்தும் பள்ளி
ADDED : செப் 01, 2025 03:54 AM

இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு முன், பெண்கள் கல்வி கற்பதை பிற்போக்குவாதிகள், கொலைக் குற்றம் போன்று பார்த்தனர். வீட்டு வாசற்படியை தாண்டவும் அனுமதிக்கவில்லை. பெண்களின் வாழ்க்கை சமையல் அறையோடு முடிந்தது. கல்வி கற்று சாதிக்க வேண்டும் என்ற அவர்களின் கனவு, கனவாகவே முடிந்தது.
ஜோதிபா புலே, சாவித்ரி பாய், அம்பேத்கர் போன்றோரின் போராட்டங்களால், பெண்களால் கல்வி கற்க முடிந்தது. ஆனால் பல சமுதாயங்களில், இப்போதும் பெண்களுக்கு கல்வி, எட்டாக்கனியாக உள்ளது. கல்வி இல்லாததால், கூலி வேலை, வீட்டு வேலை செய்து பிழைக்கின்றனர். இத்தகைய பெண்களுக்காகவே, மைசூரில் ஒரு அமைப்பு உருவாகியுள்ளது. அந்த அமைப்பு பெண்களுக்கு கல்வியளித்து, புது வாழ்வு அமைத்து தருகிறது.
மைசூரு நகரில், 'மாத்ரு மண்டலி' என்ற அமைப்பு, 1935ம் ஆண்டு துவக்கப்பட்டது. 90 ஆண்டுகளை நிறைவு செய்து, நுாற்றாண்டை நெருங்குகிறது. இந்த அமைப்பு பெண்களால், பெண்களுக்காகவே உருவாக்கப்பட்டது.
சுதந்திரம் கிடைக்கும் முன்பே, 15 பேர் சேர்ந்து மாத்ரு மண்டலி என்ற பெயரில், பள்ளி திறந்தனர். இப்பள்ளியை துவக்கியதில், பெண்களின் பங்களிப்பு அதிகம். மைசூரின் நாகரத்னம்மா, காமேஸ்வரம்மா, சவுந்தர்யம்மா உட்பட, சிலர் இந்த அமைப்பை ஏற்படுத்தினர்.
இந்த அமைப்பின் மூலம், சிறுமியருக்கு தொடக்க கல்வி முதல், பட்டப்படிப்பு வரை கல்வி அளித்தனர். திருமணம் ஆன, ஆகாத பெண்களுக்கு டெய்லரிங், கூடை பின்னுவது, ஜூஸ் மேக்கிங் உட்பட பல்வேறு பயிற்சி அளித்து, அவர்கள் சுய தொழில் செய்ய வழி வகுத்தனர். 90 ஆண்டாக தன்னலமற்ற சேவை செய்கின்றனர்.
கல்வி கற்க வந்த சிறுமியருக்கு, பாதுகாப்பான தங்கும் அறை, மதிய உணவு, நுாலகம், உடற்பயிற்சி என, அனைத்து வசதிகளும் செய்து, கல்வி அளிக்கின்றனர். இதுவரை லட்சக்கணக்கான பெண்கள் பயன் அடைந்துள்ளனர். அமைப்பின் பள்ளியில் படித்த பெண்கள், உயர் பதவி வகிக்கின்றனர். தங்களுக்கு மறு வாழ்வு அளித்த பள்ளியை, நன்றியுடன் நினைவு கூர்கின்றனர்.
இப்போதும், 'மாத்ரு மண்டலி' அமைப்பு, பெண்களுக்காக செயல்படுகிறது. ஒரு அரசு செய்ய வேண்டிய பணியை, இந்த அமைப்பு 90 ஆண்டாக செய்து வருகிறது. இன்றைய கால கட்டத்தில், நாம் மட்டுமே நன்றாக இருந்தால் போதும் என, நினைப்போரே அதிகம். இவர்களுக்கு இடையே, பெண்களும் கல்வி கற்று முன்னேற வேண்டும் என, நல்ல நோக்கத்துடன் செயல்படும் மாத்ரு மண்டலி, முன் மாதிரியாக அமைந்துள்ளது.
- நமது நிருபர் -