ADDED : மே 11, 2025 11:21 PM

கர்நாடகாவில் உள்ள அழகான மாவட்டங்களில் ஒன்று குடகு. இங்கு காபி விவசாயம் அதிக அளவில் நடக்கிறது. அழகான காபி தோட்டத்தில் உள்ள புதர் செடிகளுக்கு நடுவே அழகாக அமர்ந்து, ஒரு பெண்ணும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்.
ஆம்... அவர் பெயர் தான் அனிதா நந்தா அப்பெனாவந்தா. 62 வயதாகும் இவர், காபியின் மீதான தன் காதலை வெளிப்படுத்தும் விதமாக விவசாயம் செய்து வருகிறார்.
இவரது பூர்வீகம் பெங்களூரு. இவர் சிறுவயதாக இருக்கும் போதே, ஒவ்வொரு கோடை விடுமுறைக்கும் குடகில் உள்ள தன் தாத்தாவின் வீட்டுக்கு செல்வார். அப்போது, தன் தாத்தா விவசாயம் செய்வதை, பார்த்து ரசித்து உள்ளார்.
அந்த சிறுவயதிலே, இயற்கை மீதும், காபி விவசாயத்தின் மீதும் இவருக்கு காதல் வந்து உள்ளது. அப்போதே பல நுணுக்கங்களை கற்று கொண்டு உள்ளார்.
இதனிடையே காபியின் மீதான காதலும், குடகின் மீதான காதலும் அவரை விட்டு நீங்காத படி, அதே பகுதியை சேர்ந்த காபி விவசாயியான நந்தா பெல்லியப்பாவின் கரம் பிடித்தார். இருவரும் சேர்ந்து காபி விவசாயத்தில் இறங்கினர். ஆரம்ப காலத்தில், அவர்கள் நல்ல அறுவடையை பெற போராடினர். அச்சமயத்தில், சோகமாக இருந்த இருவரையும் அவர்களது காதல் உற்சாகப்படுத்தி உள்ளது.
இதையடுத்து, அவர்கள் காபியுடன், கருமிளகும் சேர்த்து ஊடுபயிராக பயிரிட்டனர். அச்சமயத்தில், கருமிளகை சாகுபடி செய்ததில் நல்ல லாபம் கிடைத்தது. அதே சமயம், காபியில் இருந்து பெரிய அளவிலான லாபம் கிடைக்கவில்லை. இந்நிலை பல ஆண்டுகளுக்கு பின், மாறியது. தற்போது, காபி விவசாயத்தில் பல லட்சங்களை சம்பாதித்து வருகின்றனர்.
இவர் தீங்கு விளைவிக்கும் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து விட்டார். மேலும், தேனீ வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். இப்படி, காபி, மிளகு விவசாயம் மற்றும் தேனீ வளர்ப்பில் சாதித்து வருகிறார். இவற்றின் மூலம் நல்ல வருமானத்தையும் ஈட்டி வருகிறார்
- நமது நிருபர் -.