ADDED : ஜூன் 01, 2026 12:05 AM

- நமது நிருபர் -
வீ ட்டு வளாகத்தில் செடிகள் வளர்ப்போர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு நல்லது என்றாலும், பிளாஸ்டிக் பூந்தொட்டிகளை பயன்படுத்துவது, சுற்றுச்சூழலுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது என்பது, மறுக்க முடியாத உண்மை. இதற்கு தீர்வு காண, ஆயுர்வேத டாக்டர் மீரா புதுமையான வழியை கண்டுபிடித்துள்ளார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரு நகரில் வசிக்கும் மீரா, 45, ஆயுர்வேத டாக்டராக பணியாற்றுகிறார். இவர் ஆயுர்வேத மருத்துவமனை கட்டும் போது, பல்வேறு மரங்களை வெட்ட வேண்டிய சூழ்நிலை உருவானது. இதை கண்டு மனம் வருந்திய மீரா, மரங்கள், செடிகளை வளர்க்க வேண்டும் என, உறுதி பூண்டார்.
அன்று முதல் செடிகளை நட்டு, பராமரித்து வருகிறார். பலரும் பிளாஸ்டிக் பூந்தொட்டிகள, கவர்களில் செடிகள் வளர்ப்பதை கண்டார். இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு என்பதை அறிந்த அவர், இதற்கு என்ன தீர்வு என, ஆலோசித்தார்.
அதன் பின், 'சங்கல்ப சஞ்சீவினி கார்டன் புரோடக்ஷன்' என்ற பெயரில், இயற்கையாக கிடைக்கும் தேங்காய் நாரில் விதவிதமான பூந்தொட்டிகள் தயாரிக்கிறார்.
தன் வீட்டில் செடிகள் வளர்க்க, தேங்காய் நார் பூந்தொட்டிகளை பயன்படுத்துகிறார். இது, வீட்டின் அழகை அதிகரிப்பதுடன், சுற்றுச் சூழலுக்கும் பாதுகாப்பானது.
தன் அமைப்பின் மூலம், பல வடிவங்களில் பூந்தொட்டி தயாரித்து, விற்பனை செய்கிறார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக, மீரா கூறியதாவது:
பூந்தொட்டிகள் தயாரிக்க பயன்படுத்தும் தேங்காய் நார், கேரளா மற்றும் குனிகல்லில் இருந்து வரவழைக்கப் படுகிறது. இதன் மீது ஒரு விசேஷமான ரப்பர் பயன்படுத்தி, 'ஹைட்ராலிக்' மிஷின் மூலமாக, வெவ்வேறு அளவுள்ள பூந்தொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.
நான்கு அங்குலம், ௬ அங்குலம், ௮ அங்குலம், 'ஹேங்கிங்' தொட்டிகள், கூடை போன்ற பூந்தொட்டிகள் உட்பட, பல்வேறு வடிவங்களில் பூந்தொட்டிகள் கிடைக்கின்றன.
வீட்டுக்குள் வளர்க்கப்படும் செடிகளுக்கு, நான்கு அங்குல பூந்தொட்டிகள் பொருத்தமாக இருக்கும், இந்த பூந்தொட்டிகள், குறைந்த நீரிலேயே செடிகளின் ஈரத்தன்மையை தக்க வைத்து கொள்ளும் திறன் கொண்டவைகளாகும்.
ஆறு அங்குல பூந்தொட்டிகளில் புதினா, பாலக்கீரை, காய்கறிகளை எளிதாக வளர்க்கலாம். ௮ அங்குல பூந்தொட்டிகளில், குரோட்டன், சாமந்தி உட்பட, அலங்கார செடிகளை வளர்க்கலாம். இவற்றில் பெரிய காய்கறிகளையும் வளர்க்கலாம்.
இடப்பற்றாக்குறை உள்ள வீடுகளில், ஹேங்கிங் பாட்ஸ், கிரில்லில் பொருத்தும் பூந்தொட்டிகள் பொருத்தலாம்.
தேங்காய் நார் பூந்தொட்டிகளை, நிலத்தில் நேரடியாக நடலாம் என்பதால், செடிகளின் வளர்ச்சி நன்றாக இருக்கும். சிலருக்கு பிளாஸ்டிக்கை போல, நார் பூந்தொட்டிகளும், நீண்ட நாட்கள் சேதமடையாமல் இருக்கும். பூஞ்சை பிடிக்காது. காடுகளை நாம் அழித்து, கட்டடங்கள் கட்டியுள்ளோம். ஆனால் இன்றைய சந்ததியினருக்கு, செடிகள் வளர்க்க அதிக ஆர்வம் உள்ளது. இது பாராட்டத்தக்கது.
செடிகளின் மதிப்பு, நமக்கு இப்போது புரிகிறது. செடிகள் நடுவது மட்டுமேமுக்கியம் இல்ல. சுற்றுச்சூழலை பாதுகாப்பதும் முக்கியம். நார் பூந்தொட் டிகளை பயன்படுத்தினால், சுற்றுச்சூழலுக்கும் நல்லது. செடிகளும் ஆரோக்கியமாக வளரும். வேர்களும் சேதமடையாது. நார் போன்ற குப்பையில் வீசும் பொருட்களில், பூந்தொட்டி தயாரிக்கலாம்.
வெவ்வேறு விதமான தேங்காய் நார் பூந்தொட்டிகள் வாங்க விரும்புவோர், 70199 60850, 97310 39861 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். எனது இணையதளமான, www.sanjgreem.comல் பூந்தொட்டி தொடர்பான விபரங்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
