/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
மாற்றுத்திறனாளிகளின் 'துாரிகை' பெண்
/
மாற்றுத்திறனாளிகளின் 'துாரிகை' பெண்
ADDED : மார் 16, 2025 11:16 PM

பெங்களூரை சேர்ந்தவர் புஷ்பா. வழக்கமாக பணி முடிந்து வீட்டுக்கு நடந்து செல்பவர், அன்றைய தினம் பஸ்சில் பயணித்தார். பஸ்சில் பயணிக்கும் போது, இவர் அருகில் அமர்ந்திருந்த கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி வாலிபர், இவரிடம் பேச்சு கொடுத்தார்.
இருவரும் பேசிக் கொண்டே இருந்த போது, பார்வையிழந்த மாணவர், தான் தேர்வு எழுத உள்ளதாகவும், அதற்கு உதவ முடியுமா என்று கேட்டுள்ளார். சட்டென்று மாணவர் கேட்டதும், சிறிது யோசித்த புஷ்பா, மறுநாள் தேர்வு மையத்துக்கு சென்று, அந்த மாணவருக்கு தேர்வு எழுதி கொடுத்துள்ளார்.
மாற்றிய பயணம்
அன்று முதல் மாற்றுத்திறனாளி மாணவர்களின், 'துாரிகையாக' மாறினார். 2007 முதல் இதுவரை 16 ஆண்டுகளாக, சிவில் சேவை தேர்வு, பள்ளி, கல்லுாரி, பிஎச்.டி., உட்பட 1,086 தேர்வுகளில் பங்கேற்று உதவி உள்ளார்.
இது குறித்து, அவர் கூறியதாவது:
எனது பெற்றோர் தொட்டபல்லாபூரை சேர்ந்தவர்கள், பணி தேடி, பெங்களூருக்கு குடிபெயர்ந்தோம்.
என் தந்தை, ஒப்பந்த தொழிலாளியாக பணியாற்றி வந்தார். ஆனால் 1978ல் ஏற்பட்ட விபத்தில், எனது தந்தை படுத்த படுக்கையாகி விட்டார்.
எங்களுக்கு உணவு அளிக்கவும், வீட்டு வாடகை செலுத்தவும் எனது தாயார், பல வீடுகளில் வேலை செய்து, அவரால் முடிந்த வரை எங்களை படிக்க வைத்தார்.
பல நாட்கள் வீட்டில் அமர்ந்து கொண்டு, 'எனக்கு மட்டும் ஏன்' என்று எனது தாயார் புலம்புவார். நானும், என் சகோதரரும் சிறியவர்கள் என்பதால் தாய்க்கு உதவ முடியவில்லை.
வாழ்க்கை
பொருளாதார ரீதியாக மிகவும் சிரமப்பட்டு வந்ததால், என்ன செய்வதேன்று தெரியாமல் திகைத்தேன். ஆனால், மற்றவர்களுக்கு என்னால் முடிந்த அளவு உதவ வேண்டும் என்று மட்டும் தீர்மானித்தேன்.
என் வாழ்க்கையின் கஷ்டங்கள், என்னை கருணை மனது கொண்டவள் ஆக்கியது.
எனவே தான், பஸ்சில் அன்று பயணித்த போது, மாணவர் கேட்டவுடன் சந்தோஷமாக ஒப்புக் கொண்டு, மறுநாள் தேர்வு எழுதி கொடுத்தேன். 2021 முதல் இதையே என் முழு நேரமாக செய்து வந்தேன்.
ஆனால், அதன் பின், ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். இந்நிறுவனத்தின் உரிமையாளர், அற்புதமான மனிதர்.
நான், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுதுவதை அறிந்த அவர், எனக்கு ஊக்கம் அளிக்கிறார். தேர்வு எழுத செல்லும் நேரத்தில் எல்லாம், எனக்கு விடுமுறை தந்து உதவுவார்.
விருது
இதுவரை, கன்னடம், தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், தெலுங்கு போன்ற மொழிகளில், மாற்றுத்திறனாளிகளுக்காக, 1,000க்கும் மேற்பட்ட தேர்வுகளை எழுதி உள்ளேன்.
2019ல் என் பணியை அங்கீகரித்து மத்திய அரசு, 'நாரி சக்தி புரஸ்கார்' விருது வழங்கி கவுரவித்தது. மாற்றுத்திறனாளிக்காக நான் எழுதிய முதல் தேர்வின் போது, பதற்றத்துடன் இருந்தேன்.
உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தேர்வு மையத்தில் இருந்து ஓடிவிடலாமா என்று தோன்றியது.
தேர்வு எழுதுபவர், என்னிடம் திரும்ப திரும்ப கேள்வியை கேட்டு கொண்டே இருந்தார். மேலும், நான் ஏதாவது தவறு செய்தால், அது தேர்வரின் மதிப்பெண்களை இழக்க நேரிடும் என்று பயந்தேன்.
முதன் முறை மாணவர் என்னிடம் கூறிய, 'நீங்கள் எங்களுக்காக தேர்வு எழுத முன்வந்தால், நாங்கள் வாழ்க்கையில் முன்னேறுவோம்' என்றார்.
இந்த வரிகளே, என்னை தொடர்ந்து தேர்வு எழுத வைத்தது. என் குழந்தை பருவத்தை பார்க்கும் போது, இரவு உணவு சாப்பிடுவோமா, இல்லையா என்று நாங்கள் யோசித்தோம். இது மிகவும் மோசமான வாழ்க்கை என்று நினைத்ததுண்டு.
இருப்பினும் மாற்றுத்திறனாளிகளுக்காக வேலை செய்வது, நான் மட்டுமல்ல, பலரும் என்னை போன்று துன்பப்படுகின்றனர் என்பதை புரிய வைத்தது.
என்னால் மற்றவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவ முடியாது. ஆனால், அவர்களுக்கு தேர்வு எழுதுவதன் மூலம், ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு, எனது பங்களிப்பு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.