/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
பிச்சைக்காரர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் பெண்
/
பிச்சைக்காரர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டும் பெண்
ADDED : ஜூலை 07, 2025 03:08 AM

வறுமையாலும், குடும்பத்தில் இருந்து துரத்தி விடப்படுவதாலும் வேறு வழியின்றி சாலை, கோவில் முன்பு பிச்சை எடுத்து பிழைப்பு நடத்துவோர் உள்ளனர். இவர்களை சாதாரண மனிதர்கள் போன்று பெரும்பாலோனர் நடத்துவது இல்லை. ஆனால் ஒரு சிலர் மட்டுமே பிச்சைக்காரர்களுக்கு ஆதரவாக உள்ளனர். இவர்களில் ஒருவர் ஷீலா.
மாண்டியாவின் நாகமங்களா சாமலபுரா கிராமத்தில் வசிப்பவர் கிருஷ்ணகவுடா. இவரது மனைவி ஷீலா. அழகு கலை நிபுணர். நாகமங்களாவில் பியூட்டி பார்லர் நடத்துகிறார். தெருவில் சுற்றும் பிச்சைக்காரர்களை மீட்டு, முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறார்.
இதுபற்றி ஷீலா கூறியதாவது: ஆதரவற்ற நிலையில் இருக்கும் பிச்சைக்காரர்களுக்கு என்னால் முடிந்த உதவி செய்கிறேன்.
சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சென்னராயப்பட்டணா, ஹிரேசாவே, பெல்லுார், நாகமங்களா நகரில் காரில் செல்வேன். தெருவில் சுற்றும் பிச்சைக்காரர்களை கண்டறிந்து அவர்களுக்கு முடிவெட்டி விடுவதுடன், சென்னராயப்பட்டணாவில் உள்ள முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகிறேன். சாலையோரம் வசிப்பவர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு துணி வாங்கி கொடுக்கிறேன். முதியோர் இல்லத்தில் சேர்த்து விடும் பிச்சைக்காரர்களை, 15 நாட்களுக்கு ஒரு முறை சென்று பார்க்கிறேன்.
அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கிறேன். இதை எல்லாம் பெயர், புகழுக்காக செய்யவில்லை. சமூக சேவை செய்ய வேண்டும் என்று, சிறு வயதில் இருந்து கூறியே என்னை பெற்றோர் வளர்த்தனர்.
பிச்சைக்காரர்களுக்கு நான் செய்யும் உதவிகளுக்கு கணவர் கிருஷ்ண கவுடா, மகள் டிம்பிள் ஆகியோரும் உதவியாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -