ADDED : மே 11, 2025 11:10 PM

பொதுவாக யாருக்காவது புத்தி மந்தமாக இருந்தால், அவர் தலையில் களிமண் உள்ளது என, கிண்டல் செய்வது வழக்கம். ஆனால் சாதாரண களிமண், சிலரின் கை பட்டால் அழகான சிலைகளாகவும், கலை பொருட்களாகவும், வீட்டு அலங்கார பொருட்களாகவும், கலை நயத்துடன் கூடிய பூந்தொட்டிகளாகவும் மாறுகிறது. அதே போன்று ஒரு பெண்ணின் கை வண்ணத்தில், அற்புதமான ஆபரணங்களாக உருவாகிறது.
பெண்களுக்கு நகைகள் என்றால் விருப்பம் அதிகம். நகைகளை விரும்பாத பெண்களை பார்ப்பது அபூர்வம். தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களில் தயாரான நகைகளை அணிவர். திருமணம், நிச்சயதார்த்தம், பார்ட்டி, பிறந்தநாள் விழா, பெயர் சூட்டல் என, எந்த நிகழ்ச்சி என்றாலும் சேலை நிறத்துக்கு ஏற்றபடி நகைகளை அணிவது வழக்கம்.
கலை வடிவம்
தங்கம், வெள்ளியில் மட்டுமல்ல, களிமண்ணை வைத்தும் அழகழகான நகைகளை செய்ய முடியும் என்பது, பலருக்கும் தெரியாது. இதை பிரமிளா மேகராஜ் செய்து காண்பித்து உள்ளார். மைசூரு நகரில் வசிக்கும் பிரமிளா, இயற்கையான களிமண் பயன்படுத்தி விதவிதமான டிசைன்களில் நகைகள் தயாரிப்பதில் நிபுணர்.
களிமண், பீட் கட்டர், ரோலர், மணிகள், வார்னிஷ், கலர் பெயின்ட்டுகள் உட்பட பல்வேறு பொருட்களை வைத்து, கலை வடிவத்துடன் கூடிய நகைகள் தயாரித்து ஆச்சரியப்படுத்துகிறார்.
கம்மல், ஜிமிக்கி, டாலர் செயின், மோதிரம், நெக்லஸ் என விதவிதமான நகைகள் தயாரிக்கிறார். இவைகளுக்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இந்த நகைகள் பெண்களின் அழகை, மேலும் மெருகேற்றுகிறது; விரும்பி வாங்குகின்றனர். இவை பல ஆண்டுகள் சேதமாகாமல், உடையாமல் நன்றாக இருக்கும். அன்றைய சம்பிதாயம் மற்றும் இன்றைய நவ நாகரிக பாணியில் தயாரிக்கிறார். குறைந்த விலையில் கிடைக்கின்றன.
அற்புத கலையால் பிரமிளாவுக்கு அதிக வருவாய் கிடைக்கிறது. தன் கலைத்திறன் மூலமாக மைசூரில் பிரசித்தி பெற்றுள்ளார். இவரது திறமையை பாராட்டாதவர்களே இல்லை.
சுய தொழில்
இவர் நகை தயாரித்து, வருவாய் பெறுவதுடன் நிறுத்தவில்லை. மற்ற பெண்களுக்கு களிமண்ணால் நகைகள் தயாரிப்பது பற்றி, மற்ற பெண்களுக்கும் கற்று தருகிறார். பல பெண்கள் இந்த கலையை கற்று கொண்டு, சுய தொழில் செய்கின்றனர். பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைகின்றனர்.
பெண்கள் சமைப்பது, துவைப்பது, வீட்டை பராமரிப்பு போன்ற பணிகளில் மட்டும் மூழ்கி இருக்காமல், சில கைத்தொழிலையும் கற்று கொள்வது, அவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு பெரிதும் உதவியாக இருக்கும்; வருவாய்க்கும் வழி கிடைக்கும்.
அனைத்துக்கும் தந்தை அல்லது கணவரின் கையை எதிர்பார்க்காமல், சுயமாக சம்பாதிக்கலாம். தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கி கொள்ளலாம். இதற்கு பிரமிளா மேகராஜ் சிறந்த எடுத்துக்காட்டு
- நமது நிருபர் - .