/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
படிப்பை நிறுத்தி விட்டு விவசாயத்தில் சாதித்த இளம்பெண்
/
படிப்பை நிறுத்தி விட்டு விவசாயத்தில் சாதித்த இளம்பெண்
படிப்பை நிறுத்தி விட்டு விவசாயத்தில் சாதித்த இளம்பெண்
படிப்பை நிறுத்தி விட்டு விவசாயத்தில் சாதித்த இளம்பெண்
ADDED : டிச 08, 2025 05:43 AM

- நமது நிருபர் -
விவசாயம் என்றால், முகத்தை சுளிக்கும் இந்த காலத்தில், இளம் பெண் விவசாயத்தில் ஈடுபடுவதுடன், சாதனையும் செய்துள்ளார். மாதந்தோறும் லட்சம், லட்சமாக சம்பாதிக்கிறார்.
பெலகாவி நகரின், ஜாபரவாடி கிராமத்தில் வசிப்பவர் நிகிதா வைஜு பாட்டீல், 27. இவர் ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். படிப்பில் சுட்டியாக இருந்த இவர், உயர் கல்வி படித்து சி.ஏ., ஆக வேண்டும். குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும் என, கனவு கண்டார். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன், இவரது தந்தை காலமானார். குடும்ப பொறுப்பு, நிகிதாவின் தோளில் விழுந்தது.
உறுதியான குறிக்கோள் வேறு வழியின்றி, படிப்பை நிறுத்திவிட்டு, வேறு வேலை தேடி செல்லாமல் விவசாயத்தில் ஈடுபட முடிவு செய்தார். அவரது முடிவை கேட்டு குடும்பத்தினர், நண்பர்கள் ஆச்சரியம் அடைந்தனர். விவசாயம் செய்வது எளிதான வேலை அல்ல; நன்றாக ஆலோசிக்கும்படி கூறினர். இதை பொருட்படுத்தாத நிகிதா, விவசாயத்தில் சாதிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தார். அவரது குறிக்கோள் நிறைவேற தாய் அஞ்சனா, சகோதரர் அபிஷேக், சித்தப்பா தானாஜி உறுதுணையாக நின்றனர்.
முதலில் 15 சென்ட் நிலத்தில், வெள்ளரிக்காய் பயிரிட்டார். வானிலை மாற்றத்தால் விளைச்சல் கிடைக்கவில்லை. ஆனால் நிகிதா மனம் தளரவில்லை. இவரது தந்தை எப்போதும், தோல்விதான் வெற்றியின் முதல்படி என, கூறுவார். இது நிகிதாவின் மனதில் ஆழமாக பதிந்திருந்தது. அதன்படியே நடந்து கொண்டார்.
தன் சித்தப்பா உட்பட மூத்த விவசாயிகளிடம் ஆலோசனை கேட்டறிந்தார். வெள்ளரிக்காய்க்கு பின், பச்சை மிளகாய் பயிரிட்டார். இது அவருக்கு வெற்றியை தேடிக்கொடுத்தது, தனது 4 ஏக்கர் நிலத்தில், 30 சென்ட் நிலத்தில் பச்சை மிளகாய் பயிரிட்டார். சொட்டு நீர்ப்பாசனம் பயன்படுத்தினார்.
4 டன் மிளகாய் முதல் சாகுபடியில் 4 டன் மிளகாய் விளைந்து, லட்சக்கணக்கான ரூபாய் லாபம் கிடைத்தது. 10 முதல் 12 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யப்படுகிறது. இவரது நிலத்தில் 15 பெண்களுக்கு வேலை கொடுத்துள்ளார். இவர் விளைவிக்கும் பச்சை மிளகாய் உயர் தரமானது. ஐந்து இஞ்ச் நீளமானது. இந்த மிளகாய்க்கு மார்க்கெட்டில் நல்ல, 'டிமாண்ட்' உள்ளது.
நிகிதாவின் நிலத்தில் விளையும் பச்சை மிளகாய், கோவா, மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு அதிக அளவில் சப்ளை செய்யப்படுகிறது. பர்கர் தயாரிக்க இம்மிளகாய் பயன்படுத்துவதால், அதிக தேவை உள்ளது. லாபமும் கிடைக்கிறது. தன் குறிக்கோளை நிகிதா எட்டியுள்ளார்.
அவரது சாதனையை கவனித்து, அக்கம், பக்கத்து விவசாயிகள் நிகிதாவின் நிலத்துக்கு வந்து, பார்வையிட்டு ஆலோசனை பெறுகின்றனர்.

