/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
ஆடை வடிவமைப்பு மீதான ஆர்வம் தொழிலதிபரான பெண்
/
ஆடை வடிவமைப்பு மீதான ஆர்வம் தொழிலதிபரான பெண்
ADDED : செப் 22, 2025 04:06 AM

ஆடை வடிவமைப்பு மீதான தனது ஆர்வத்தால், இன்று இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பா நாடுகளுக்கும் குழந்தைகளுக்கான ஆடைகளை ஏற்றுமதி செய்து வருகிறார் மைசூரு பெண்.
மைசூரை சேர்ந்தவர் துளசி பெலாகூர். ஆடை வடிவமைப்பு மீது இருந்த ஆர்வம் குறித்து அவர் கூறியதாவது:
எனக்கு சிறு வயதில் இருந்தே ஆடை வடிவமைப்பில் ஆர்வம் இருந்தது. ஆனால், 18 வயதிலேயே எனக்கு திருமணம், குழந்தைகள் என அமைந்து விட்டது. பழமைவாத குடும்பத்தில் பிறந்ததால், ஆடை வடிவமைப்பு படிக்க அனுமதிக்கவில்லை. ஆனாலும், ஆடை வடிவமைப்பின் மீது இருந்த ஆர்வம் மட்டும் குறையவில்லை.
குழந்தைகள் ஓரளவு வளர்ந்த பின், எனக்கு இத்துறையில் சாதிக்க வேண்டும்; சுயமாக வாழ வேண்டும் என்று தோன்றியது. என் குழந்தைகளுக்கு புதுப்புது ஆடைகளை நானே வடிவமைத்து வந்தேன்.
பெங்களூரில் சிறிய அளவில் ஆடை வடிவமைப்பு மையத்தை துவக்கினேன். விரைவில் பெரிய அளவிலான உற்பத்தி பிரிவாக உயர்ந்தது. 2020ல் தொற்றுநோய் காலத்தில், வேலை, குடும்பத்தை கவனித்து கொள்ளவும், பெங்களூரில் செலவீனங்கள் அதிகம் என்பதால் எனது மையத்தை மைசூருக்கு மாற்றிக் கொண்டேன்.
இதனால் இந்தியா மட்டுமின்றி, ஐரோப்பா நாடுகளுக்கும் ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. 'இடா அப்பாரல்ஸ்' என்ற பெயரில் 16 வயது குழந்தைகளுக்கு குறைந்தபட்ச, வசதியான, நீடித்து உழைக்க கூடிய ஆடைகள் செய்து வருகிறோம்.
ஆடைகளை நாங்களே வடிவமைப்பது, உற்பத்தி செய்வதால், தரமும் உயர் தரத்தில் உள்ளது. தினமும் 40,000 ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன. பண்டிகை காலத்தில் 50 ஆயிரமாக உயரும்.
எங்கள் நிறுவனத்தில் 120 பேர் பணியாற்றுகின்றனர். இதில், 20 சதவீதம் பேர் பெண்கள். பெண்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு மரியாதைக்குரிய, ஆதரவு அளிக்கும் இடமாக உருவாக்க விரும்பினேன்.
அவர்களை பணியாளர்களாக பார்க்காமல், குடும்பத்தில் ஒருவராக பார்த்து வருகிறேன். இதனால் அவர்களின் தனிப்பட்ட பிரச்னைகளையும் கூட என்னிடம் விவாதிக்கின்றனர்.
இத்துறையில் தொழிலாளர் பிரச்னைகள், பயிற்சி போன்ற பல சவால்கள் உள்ளன. அதை தவிர்க்க முடியாது. தீர்வுகளை கண்டுபிடிக்க மட்டுமே முயற்சிப்பேன். ஒரு நாள் அனைத்து பெண்களும் தொழிற்சங்கம் உருவாக்கி, இங்கிருந்து சென்றுவிட்டனர். பணிகள் முடிக்க வேண்டும் என்பதால், விரைவாக பெண்களை நியமித்து, பயிற்சி அளித்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -