ADDED : ஜூலை 26, 2026 11:51 PM

- நமது நிருபர் -
கோலாரின் சீனிவாசப்பூர் தாலுகா நாராயணபுரா கிராமத்தை சேர்ந்தவர் சந்தனா ராவ், 34. 'ஹார்டிஸ்ட்ஸ்' என்ற பிராண்ட் டிசைனிங் நிறுவனத்தின் நிறுவனராக உள்ளார். கிராம பின்னணி கொண்ட, வேலை தேடும் இளம் சமூகத்தினருக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்தில் நிறுவனத்தை நடத்துகிறார்.
தனது திறமையால் துபாய், அமெரிக்கா, சிலி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் உள்ள, முன்னணி நிறுவனங்களின் பிராண்டிங் ஆர்டர்களை பெற்று சிறப்பான சேவை அளிக்கிறார். கிராபிக் டிசைன், லோகோ உருவாக்கம், இணையதள மேம்பாடு, சமூக ஊடக மேலாண்மை உள்ளிட்ட சேவைகளை, சந்தனாவின் நிறுவனம் செய்து கொடுக்கிறது.
250 கி.மீ., பயணம் தனது பயணம் குறித்து சந்தனா ராவ் கூறியதாவது:
எனது அப்பா தபால்காரராக வேலை செய்தவர். தாய் ஆசிரியை. எனது பள்ளி படிப்பை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் தான் படித்தேன். காட்சி கலை துறையில் சாதிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. பெற்றோரிடம் கூறிய போது எனது ஆசையை நிறைவேற்ற, பெங்களூரில் உள்ள கல்லுாரியில் சேர்ந்து படிக்கும்படி ஊக்குவித்தனர்.
பெங்களூரில் தங்கி படிக்கும் அளவுக்கு என்னிடம் வசதி இல்லை. உறவினர்கள் வீடுகளில் தங்கி படிக்கலாம் என்று இருந்தேன். ஆனால் யாருமே என்னை அவர்கள் வீட்டில் தங்க வைக்க சம்மதிக்கவில்லை. கல்லுாரி கட்டணமும் அதிகமாக இருந்தது. இதனால் தினமும் வீட்டில் இருந்து கல்லுாரிக்கு சென்று வந்தேன். தினமும், 250 கி.மீ., பயணம் செய்தேன்.
கை நிறைய சம்பளம் சில நேரம் வீட்டிற்கு சென்றடைய நள்ளிரவு கூட ஆகும். அப்போது இரவில் சில மணி நேரங்கள் மட்டுமே என்னால் துாங்க முடியும். காட்சி கலையில், 2011ல் பட்டப்படிப்பு முடித்த பின், வேலை கிடைக்கவில்லை.
கடந்த, 2012ல் இந்திராநகரில் உள்ள சிறிய நிறுவனத்தில் ஆறு மாதம் பயிற்சி அடிப்படையில் வேலை செய்தேன். சம்பளம் வழங்கவில்லை.
இரண்டு நேர உணவு தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி உணவு கிடைத்தது. அந்த காலகட்டத்தில் என்னால் முடிந்த அனைத்தையும் கற்று கொண்டேன். சில நாட்களில் பன்னாட்டு நிறுவனத்தில் வேலை கிடைத்தது. கை நிறைய சம்பளம் வந்தது. எல்லாம் நன்றாக சென்றது.
ஒரு கட்டத்தில் தன்னை போலவே மற்றவர்களும் கஷ்டப்படுவர்களே என்பதை உணர்ந்தேன்.
இதனால் கடந்த 2016ல் எனது வேலையை ராஜினாமா செய்து விட்டு, ஹார்டிஸ்ட்ஸ் என்ற நிறுவனத்தை துவங்கினேன். யாரிடம் பணம் வாங்கவில்லை. எனது சேமிப்பில் ஆரம்பித்த நிறுவனம் இது.
கிராமப்புற மாணவர்கள், வேலையில்லா பட்டதாரிகளுக்கு எனது நிறுவனத்தில் பணி கொடுத்தேன். சிறிதாக ஆரம்பித்த எனது நிறுவனம் தற்போது வெளிநாடு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது. இதற்கு எனது ஊழியர்கள் தான் காரணம். மனதிற்கு நிறைவான வாழ்க்கை வாழ்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
