/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
குழந்தை திருமணத்திற்கு எதிராக போராடும் 'சகி'
/
குழந்தை திருமணத்திற்கு எதிராக போராடும் 'சகி'
ADDED : பிப் 16, 2025 10:20 PM

பெண்கள் நாட்டின் கண்கள் என்று சொல்வர். இன்றைய நவீன காலகட்டத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறையிலும் சாதிக்கின்றனர். ஆனாலும் நாட்டின் சில பகுதிகளில் இன்னும் பெண்களுக்கு எதிராக அடக்குமுறை நடக்கிறது. பெரும்பாலான மாநிலங்களில் சிறுமியருக்கு குழந்தை திருமணங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. இதை தடுக்க மாநில அரசுகள் சார்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன.
கர்நாடகாவின் வடமாவட்டங்களில் அதிகமாக குழந்தை திருமணங்கள் நடக்கின்றன. இதற்கு எதிராக, ஒரு இளம்பெண் கிராமம், கிராமமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
ஏழைகளுக்கு உதவி
விஜயநகரா மாவட்டம், ஹொஸ்பேட் டவுனில் வசிப்பவர் நஸ்ரின், 25. இவர், 'சகி' என்ற அமைப்பில் உறுப்பினராக உள்ளார். அந்த அமைப்பின் மூலம் ஏழைகளுக்கு உதவி செய்கிறார். குழந்தை திருமணத்தை தடுப்பதில் முன்நின்று போராட்டம் நடத்துகிறார்.
தனது நீண்ட பயணம் குறித்து நஸ்ரின் கூறியதாவது:
எனது தந்தை இறந்து, பல ஆண்டுகள் ஆகிறது. அவர் இறந்த பின், எனது அம்மாவை வெளியே வரவிடாமல் உறவினர்கள் வீட்டிற்குள் முடக்கி விட்டனர். யாரிடமும் பேச கூட அனுமதிப்பது இல்லை. நானும் பள்ளிக்கு செல்ல முடியவில்லை; படிப்பை கைவிட்டேன். உறவினர் ஒருவரின் மூலம் சகி அமைப்பில் சேர்ந்தேன். அந்த அமைப்பின் உதவியுடன் கல்வி கற்று, பி.காம்., வரை படித்தேன்.
26 உறுப்பினர்கள்
சகி அமைப்பு, குழந்தை திருமணங்களை தடுப்பதிலும், படிப்பை பாதியில் நிறுத்தியவர்களிடம் இருக்கும் திறமையை வெளி கொண்டு வருவதிலும் நிறைய ஆர்வம் காட்டுகிறது. இந்த அமைப்பில் 26 பேர் உறுப்பினராக உள்ளோம். எல்லோரும் 18 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்கள். நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து பேசி, எங்களது திறமையை வெளிக்கொண்டு வருகிறோம்.
மாதத்திற்கு இரு முறை விஜயநகரா, பல்லாரி, விஜயபுரா, யாத்கிர், ராய்ச்சூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சென்று, குழந்தை திருமணத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
வாழ்வில் நிறைய கனவுகளுடன் இருக்கும் பெண் பிள்ளைகளுக்கு, சிறு வயதில் திருமணம் செய்து வைத்து, அவர்களின் ஆசையை சிதைத்து விடாதீர்கள் என்பது எங்கள் கோரிக்கை. நாங்கள் ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதால், நிறைய குழந்தை திருமணங்களை தடுத்து நிறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -