/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
சுயதொழிலில் சாதிக்கும் 'ட்ரோன் சகி' பெண்கள்
/
சுயதொழிலில் சாதிக்கும் 'ட்ரோன் சகி' பெண்கள்
ADDED : ஏப் 14, 2025 05:38 AM

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை, ஆண்களை விட பெண்கள் சிறப்பாக பயன்படுத்துகின்றனர். தங்களின் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்கின்றனர்.
பெண்களின் நல் வாழ்வுக்காக, கர்நாடக அரசு போன்று, மத்திய அரசும் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இதில், 'நமோ ட்ரோன் தீதி' திட்டமும் ஒன்றாகும். ட்ரோன் இயக்கும் பயிற்சி அளித்து, இத்திட்டத்தை கொப்பால் மாவட்ட பெண்கள், சிறப்பாக பயன்படுத்துகின்றனர். மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்கின்றனர்.
கொப்பால் மாவட்டம், கங்காவதியில் 'ட்ரோன் சகி' என்ற பெயரில் குழு அமைத்துள்ளனர். இதில் 12 பெண்கள் உள்ளனர். இவர்கள் ட்ரோன் இயக்கும் பயிற்சியை முடித்து, சான்றிதழ் பெற்றுள்ளனர். ட்ரோன் பயன்படுத்தி விவசாயிகளின் விளை நிலங்களுக்கு, பூச்சி கொல்லி மருந்து தெளித்து, பணம் சம்பாதிக்கின்றனர். யாரையும் சார்ந்திராமல் சுய தொழில் செய்கின்றனர்.
இது குறித்து, தாலுகா பஞ்சாயத்து அதிகாரி ராமரெட்டி கூறியதாவது:
மத்திய அரசின், 'நமோ ட்ரோன் தீதி' திட்டத்தின் கீழ், பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. கங்காவதி, குகநுார் தாலுகாவின், 12 பெண்களுக்கு இப்கோ, கோரமண்டல், ஆர்.சி.எப்., உட்பட பல்வேறு நிறுவனங்கள் சார்பில், மைசூரு, ஹைதராபாத், சென்னையின் ஏரோநாடிக்ஸ் மையங்களில் 15 நாட்கள் வரை பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது சுய தொழில் துவங்கியுள்ளனர். விவசாய நிலம், தோட்டங்களுக்கு பூச்சி கொல்லி மருந்து தெளித்து, வருவாய் பெறுகின்றனர். மற்ற பெண்களுக்கு ஊக்கம் அளிக்கின்றனர். 1 ஏக்கர் நிலத்துக்கு, ட்ரோன் மூலம் 10 நிமிடங்களில், பூச்சி கொல்லி மருந்து தெளிக்கலாம். ஒரு பணியாள், இரண்டு நாட்களில் செய்யும் வேலையை, ட்ரோன்கள் 45 நிமிடங்களில் செய்கின்றன.
இதனால், நேரம் மிச்சமாவதுடன், பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கிறது. 1 ஏக்கர் நெற் பயிருக்கு, பூச்சிகொல்லி மருந்து தெளிக்க, பெண்கள் 400 ரூபாய் கட்டணம் பெறுகின்றனர். ஒரு நாளில் 20 முதல் 25 ஏக்கர் நிலத்துக்கு, மருந்து தெளிக்கலாம். தினமும் பல ஆயிரம் ரூபாய் வரை வருவாய் பெறுகின்றனர். குழுவை சேர்ந்த துளசி என்பவர், 1 லட்சம் ரூபாய் சம்பாதித்துள்ளார்.
விவசாயிகள் பயிர்களுக்கு பூச்சி கொல்லி மருந்து தெளிக்க, அதிகம் கஷ்டப்பட வேண்டியது இல்லை. ட்ரோன் தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளது. இதை விவசாயிகள் பயன்படுத்தி பலன் அடைய வேண்டும். பெண்களும், நல்ல முறையில் பயன்படுத்தி தங்களின் பொருளாதாரத்தை உயர்த்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

