ADDED : செப் 20, 2026 11:16 PM

- நமது நிருபர் -
ராம்நகர் மாவட்டம், சென்னப்பட்டணா தாலுகா, ஜே.பயதரஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் கிரிஜம்மா ராச்சையா, 67, நாட்டுபுற பாடகி. தனது கிராமத்திலோ, சுற்று வட்டார கிராமங்களிலோ நடக்கும் திருமணம், குழந்தைக்கு பெயர் சூட்டு விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில், நாட்டுப்புற பாடல் பாடி வாழ்த்து தெரிவிப்பதன் மூலம் பிரபலமாகி உள்ளார்.
கிரிஜம்மா கூறியதாவது:
சிறு வயதில் இருந்தே நாட்டுப்புற பாடல் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். கிராமங்களில் நடக்கும் தெருக்கூத்துகளில் பாடப்படும் நாட்டுப்புற பாடல்களை கேட்பது எனக்கு பிடிக்கும். இரவு முழுதும் கண்விழித்து பார்ப்பேன்.
என்னை வளர்த்த பாட்டி, இரவில் என்னை துாங்க வைப்பதற்காக தலையை ஆட்டி, ஆட்டி பாடல் படிப்பதை பார்த்து, எனக்கும் நாட்டுப்புற பாடல் படிக்க ஆசை வந்தது. சில கலை குழுவினருடன் இணைந்து பாடல் பாட கற்று கொண்டேன்.
மலை மாதேஸ்வரர், சித்தப்பாஜி, சுஞ்சனகிரி கால பைரேஸ்வரர், வடே மல்லேஸ்வரர் ஆகியோரை புகழ்ந்து பாடல் பாடி உள்ளேன். தற்போது சுப நிகழ்ச்சிகள் நடக்கும் வீடுகளில் நாட்டுப்புற பாடல் பாடுகிறேன். அதை விரும்பி கேட்போர் என்னை பாராட்டுகின்றனர். இதுவே, 67 வயதில் எனக்கு கிடைக்கும் ஊக்கம்.
யாரிடம் எந்த சூழ்நிலையிலும், கை ஏந்தி நிற்க கூடாது என்பதற்காக விவசாயம், கூலி வேலை செய்கிறேன். அரசு பள்ளி மாணவர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன்.
எனக்கு சொந்தமான நிலத்தில், மயானம் அமைப்பதற்காக விட்டு கொடுத்து உள்ளேன். மரங்கள் தான் நாம் சுத்தமான காற்றை சுவாசிக்க காரணம் என்பதால், எனது கிராமத்தில் உள்ள சாலையோரம், 400 மரக்கன்றுகளை நட்டு வளர்க்கிறேன்.
என்னை அங்கீகரிக்கும் வகையில் சில அமைப்புகள் விருதுகள் வழங்கி உள்ளன. ஆனால் இதுவரை அரசிடம் இருந்து எந்த விருதோ, பாராட்டோ கிடைக்கவில்லை. அதுபற்றி கவலையும் இல்லை. எனது கலை அடுத்த தலைமுறையை சென்று அடைந்தால் போதும்.
என்னுடன் சேர்ந்து நாட்டுப்புற பாடல்கள் பாடியவர்கள், தற்போது சுயமாக பாடும் அளவுக்கு உயர்ந்துள்ளனர். எனது இந்த வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
