/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
தற்காப்பு கலையில் தங்கம் வென்ற வீராங்கனை
/
தற்காப்பு கலையில் தங்கம் வென்ற வீராங்கனை
ADDED : ஆக 17, 2025 10:12 PM

மைசூரு காயத்ரிபுராவை சேர்ந்த கிரிதர் - சங்கீதா தம்பதியின் மகள் பிரணதி, 10. இவர் தன் 4 வயதில் வுஷு என்ற தற்காப்பு கலையை கற்க துவங்கினார். இது சீனாவின் பாரம்பரிய தற்காப்பு கலைகளில் ஒன்றாகும். இந்த விளையாட்டு நம் நாட்டில் அதிகம் பிரபலம் அடையவில்லை. இருப்பினும், உலக அளவில் கடினமான விளையாட்டுகளில் ஒன்றாகும்.
இவர், கடினமான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்தார். மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில், சுலபமாகவே வெற்றி பெற்றார். இதன் காரணமாக, மாநில அளவில் நடந்த சப் - ஜூனியர் போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார். தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கேற்று பதக்கங்கள் பெற்றார்.
5 தங்கம் இதுவரை, பிரணதி மாநில அளவில் 5 தங்க பதக்கங்களும், தேசிய அளவில் மூன்று பதக்கங்களும் பெற்றார். இதனால், சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்க தயாரானார்.
இம்மாதம் 1 முதல் 6ம் தேதி வரை, ஜியார்ஜியா நாட்டின் படுமி நகரத்தில் நடந்த, 2025 படுமி ஓபன் சர்வதேச வுஷு போட்டியில் பங்கேற்றார். இப்போட்டியில் தங்கப்பதக்கம் பெற்று, நாட்டிற்கு பெருமை சேர்த்தார். இதன் மூலம் நம் நாட்டின் சார்பாக 'வுஷு' போட்டியில், மிக சிறிய வயதில் பங்கேற்று, பதக்கம் வாங்கிய வீராங்கனை என்ற பெருமையை பெற்று உள்ளார்.
சாதனை புத்தகம் அதுமட்டுமின்றி, கர்நாடகாவில் 11 வயதுக்கு உட்பட்ட, 27 கிலோவுக்கு கீழ் உள்ள எடைப்பிரிவில், வுஷு போட்டியில் யாராலும் வெல்ல முடியாதவராக பிரணதி திகழ்கிறார். கேலோ இந்திய விளையாட்டு போட்டியிலும், பதக்கம் பெற்றார்.
இவரது திறமையை பாராட்டி, இந்தியன் புக் ஆப் ரிக்கார்டு புத்தகம், லிம்கா சாதனை புத்தகத்திலும் 2022ம் ஆண்டே இடம் பெற்றார். கர்நாடகா சாதனையாளர்கள் விருதையும் வாங்கினார். 2022ல் நடந்த மைசூரு தசரா போட்டியில் மாவட்ட விளையாட்டு துறை, பிரணதியை கவுரவித்தது.
இவர், மைசூரில் நடக்கும் கோடைக்கால முகாம்களில் பயிற்சி பெறுவதுடன் மட்டுமின்றி, சிறப்பு குழந்தைகளுக்கும் பயிற்சி அளித்து வருகிறார்.
- நமது நிருபர் -