/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
'சியாம் கில்லியாம்' விருது பெறும் கர்நாடகாவின் ஷீலா கவுடா
/
'சியாம் கில்லியாம்' விருது பெறும் கர்நாடகாவின் ஷீலா கவுடா
'சியாம் கில்லியாம்' விருது பெறும் கர்நாடகாவின் ஷீலா கவுடா
'சியாம் கில்லியாம்' விருது பெறும் கர்நாடகாவின் ஷீலா கவுடா
ADDED : ஏப் 07, 2025 06:05 AM

சர்வதேச அளவிலான கலை சாதனையாளர்களுக்கு வழங்கப்படும், பிரபலமான 'சியாம் கில்லியாம் விருது'க்கு, கர்நாடகாவின் ஷீலா கவுடா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதி தாலுகாவை சேர்ந்தவர் ஷீலா கவுடா, 68. இவர் தற்போது பெங்களூரில் வசிக்கிறார். இவர் 1979ல் பெங்களூரின் கே.என்., கலை கல்லுாரியில் கலை தொடர்பான பட்டம் பெற்றார். விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின், சாந்தி நிகேதனில் 1982ல் முதுகலை பட்டம் பெற்றார். 1986ல் லண்டனின் 'ராயல் காலேஜ் ஆப் ஆர்ட்' கல்லுாரியில் எம்.ஏ., பட்டப் படிப்பை முடித்தார்.
ஷீலா கவுடா, ஓவியக்கலை மீது மட்டுமின்றி, சிற்பக்கலையிலும் ஆர்வம் கொண்டவர். கைவினை பொருட்கள் உருவாக்குவதில் கை தேர்ந்தவர். இவரது கையில் தலை முடி, சாணம், ஊதுவர்த்தி, குங்குமம் என, எது கிடைத்தாலும், அழகான கலை பொருளாக மாறும்.
இவரது கை வண்ணத்தில் உருவான, பல்வேறு கலை பொருட்கள், உள்நாடு, வெளிநாடுகளின் கேலரிகள், மியூசியம்களில் இடம் பெற்றுள்ளன. கண்காட்சிகளிலும் இவரது படைப்புகளை காணலாம்.
உழைப்பாளர்கள் மீது இவருக்கு, அதிகமான பற்றுதல் உள்ளது. இவர்களை மையமாக வைத்து உருவாக்கிய கலை சித்திரங்கள், மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இவரது கலைத்திறனை பாராட்டி, பல விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது மிகவும் பிரபலமான விருதாக கருதப்படும், 'சியாம் கில்லியாம் விருது'க்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரின் தியா ஆர்ட் பவுண்டேஷன் மற்றும் சியாம் கில்லியாம் பவுண்டேஷன் ஒருங்கிணைந்து இந்த விருதை வழங்குகின்றன. இது 68.49 லட்சம் ரூபாய் ரொக்கப்பரிசு, சான்றிதழ் கொண்டதாகும். கடந்த 2023ல் இந்த விருது வழங்குவது துவங்கப்பட்டுள்ளது.
சியாம் கில்லியாம் பவுண்டேஷன் தலைவி அனி கால்வாக், தன் பவுண்டேஷன் சார்பில் ஆண்டு தோறும் இந்த விருதை வழங்க முடிவு செய்தார். கடந்த 2024ம் ஆண்டுக்கான முதல் விருது, கானா நாட்டின் இப்ராஹிம் மஹிமாவுக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இரண்டாவது ஆண்டான 2025ல், கர்நாடகாவை சேர்ந்த ஷீலா கவுடா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- நமது நிருபர் -