/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
37 ஆண்டுகளாக புரோகிதர் பணி செய்யும் மகேஸ்வரி
/
37 ஆண்டுகளாக புரோகிதர் பணி செய்யும் மகேஸ்வரி
ADDED : அக் 27, 2025 03:28 AM

: திருமண நிகழ்ச்சி, ஹோமத்தில் ஆண் புரோகிதர்களை பார்த்திருப்போம். ஆனால், மைசூரை சேர்ந்த ஒரு பெண், வேதங்களை படித்து, 37 ஆண்டுகளாக திருமண நிகழ்ச்சி, வேத பாடங்களையும் நடத்தி வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா.
ஆம்... உண்மை தான். மைசூரு டி.நரசிபுராவை சேர்ந்தவர்கள் பிரசன்ன மூர்த்தி - லீலாவதி. இவரின் மகள் டாக்டர் பிரம்மரம்பா மகேஸ்வரி. தற்போது ஸ்ரீராமபுரத்தில் வசித்து வருகிறார்.
கேள்வி எழுந்தது மகேஸ்வரிக்கு 16 வயது இருக்கும்போது, விஜயகுமாருக்கு பெற்றோர் திருமணம் செய்து வைத்தனர். பின், அவரின் தந்தை காலமான பின், மரணம் என்றால் என்ன, இறந்தவர்களின் ஆன்மா எங்கு செல்லும் என பல கேள்விகள் அவரை சுற்றி வந்தன.
கடந்த 1984ல் பிலிகிரி ரங்கநாத மலையில் ஸ்ரீபிரம்மதேவ் சுவாமிகளை, மகேஸ்வரி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை, அவரிடம் கேட்டார். இதற்கான விடையை, வேதங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று சுவாமிகள் கூறினார். இதையடுத்து, 1988ல் கணபதி கிருஷ்ண பட்டிடம் வேதங்கள் கற்க துவங்கியது மட்டுமின்றி, வேத வாழ்க்கை முறையை வாழ துவங்கினார்.
கூட்டு திருமணம் அதன்பின், சுவாமிகள் தலைமையில் மாண்டியா மாவட்டம் மத்துாரின் வட்டகெரேயில் நடந்த கூட்டு திருமணத்தில் பங்கேற்றார். 1990ல் பெங்களூரில் ஆர்ய சமாஜ் சார்பில் நடந்த யக்ஞத்திலும் பங்கேற்றார்.
பல்வேறு வேத பாடங்களை மகேஸ்வரி கற்றார். 2001 ல் பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தில் நடந்த சமஸ்கிருத திருவிழாவில் பங்கேற்று, வேதங்கள் வாசித்தார். அதன்பின், பல்வேறு ஹிந்து சம்பிரதாயங்களில் பங்கேற்று வந்தார்.
கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் சென்று கன்னடம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் வேதம், உபன்யாசம் நிகழ்த்தினார். இது தவிர, மறைந்த கன்னட நடிகர்கள் விஷ்ணுவர்த்தன், லோகேஷ், இயக்குனர் கிரிஷ் காசரவள்ளி ஆகியோர், அவர்களின் வீடுகளுக்கு மகேஸ்வரியை அழைத்து, வேத சடங்குகளை நடத்தி உள்ளனர். இது தவிர பிறப்பு முதல் இறப்பு வரையிலான அனைத்து ச டங்குகளையும் செய்துள்ளார்.
சொற்பொழிவு பள்ளி, கல்லுாரிகள், கோவில்கள், கார்ப்பரேட் நிறுவனங்களில் ஆன்மிக சொற்பொழிவு செய்துள்ளார். தற்போது வேதம் படிக்க விரும்பும் பெண்களுக்கு, தனது, 'ஈஷாவசம் வேதநாத கேந்திரா'வில், காயத்ரி மந்திரம், யக்ன யாகம், ஹோமம், 16 சம்ஸ்காரங்கள் (உளவியல் முத்திரைகள். இவை எண்ணங்கள், செயல்களுக்கு வண்ணம் பூசி, கர்மா கோட்பாட்டுக்கு அடிப்படையாக அமைவது) கற்றுத்தருகிறார்.
தற்போது அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவை சேர்ந்த 40க்கும் மேற்பட்ட மாணவர்கள், இவரிடம் ஆன்லைனில் புரோகிதம், வேத பாடங்களை கற்று வருகின்றனர். இவரின் செயல்பாடுகள் குறித்து மாநிலத்தின் தகவல், மக்கள் தொடர்பு துறையும் ஆவணமாக தயாரித்து உள்ளன.
இது குறித்து மகேஸ்வரி கூறுகையில், ''தற்போதைய சமூகம், பெண் புரோகிதர்களை ஏற்றுக் கொண்டு, அவர்களை மதிப்பது பெருமை அளிக்கிறது. நான் வீரசைவ குடும்பத்தில் பிறந்ததால், ஒரு உதாரணமாக இருக்கிறேன். ஜாதி, மதம், வேறுபாடின்றி யார் வேண்டுமானாலும், வேதங்களை கற்றுக்கொள்ளலாம்,'' என்றார்.
- நமது நிருபர் -

