/
ஸ்பெஷல்
/
ஆடவள் அரங்கம்
/
மாடலிங்கில் அசத்தும் மங்களூரு அழகிகள்
/
மாடலிங்கில் அசத்தும் மங்களூரு அழகிகள்
ADDED : மார் 24, 2025 05:13 AM

அழகான நகரம் என்றால் அது பெங்களூரு. அழகிகள் நிறைந்த நகரம் என்றால் அது மங்களூரு என பலர் சொல்லி கேள்வி பட்டிருப்பீர்கள். இந்த வாசகங்களுக்கு உயிர் அளிக்கும் விதமாக, மங்களூரை சேர்ந்த ஏழு மங்கையர், பஹ்ரைன் நாட்டில் நடக்க இருக்கும் சர்வதேச அழகி போட்டிக்கு தேர்வு ஆகி உள்ளனர்.
மங்களூரை சேர்ந்த ஐஸ்வர்யா ராய், உலக அழகி பட்டத்தை வாங்கியதை அடுத்து, கர்நாடகாவில் அழகி போட்டி என்றாலே மங்களூரு தான் என்று உள்ளது. மங்களூரில் உள்ள பெண்களுக்கு மாடலிங் துறையில் ஆர்வமும் அதிகரித்தது.
மங்களூரில் உள்ள பெண்கள் பலர் மாடலிங் துறைக்கு வருகை தருகின்றனர். சிலர், படிக்கும் போதும், படித்து முடித்த பிறகும் இத்துறைக்கு வருகின்றனர்.
மாடல் அகாடமி
இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவே பல அகாடமிகள் இருக்கின்றன. அப்படி, மங்களூரில் உள்ள பல்லாக் நகரில் வென்ஸ் மாடல் அகாடமி கடந்த எட்டு மாதங்களுக்கு முன் துவங்கப்பட்டது.
இதை நடிகையும், மாடலிங்குமான வென்சிட்டா டையாஸ் நடத்தி வருகிறார். இவர் தாய்லாந்தில் நடந்த உலக அளவிலான அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதன் மூலம் பிரபலம் அடைந்தவர். தற்போது, இவரது அகாடமியில் பயிற்சி பெற்று வரும் ஏஞ்சல், சோனல், ஜெனகா, திவ்யா, நிஷ்மிதா, ஜாய் லின், அயனா ஆகியோர் 'மிஸ் குட்லா' எனும் சர்வதேச அளவிலான அழகி போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த அழகி போட்டி ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும். இந்த முறை பஹ்ரைன் நாட்டில் வரும் ஏப்ரல் 4ம் தேதி நடக்க உள்ளது.
ஏழு பேருக்கு
இவர்கள் ஏழு பேரும் மாநில, தேசிய அளவில் நடந்த அழகி போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெற்றனர். இதன் காரணமாக, பஹ்ரைன் நாட்டில் நடக்க உள்ள மிஸ் குட்லா 2025 அழகி போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த போட்டியில், இந்தியாவின் சார்பாக, இவர்கள் ஏழு பேரும் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த ஆனந்தமான தருணம் குறித்து பயிற்சியாளரும், வென்சிட்டா டையாஸ் கூறுகையில், ''இந்த அகாடமியை எட்டு மாதங்களுக்கு முன் தான் துவங்கினேன். இந்த குறுகிய காலத்திற்குள் எனது அகாடமியில் பயிற்சி பெற்ற ஏழு பேர் சர்வதேச அழகி போட்டிக்கு தேர்வு ஆகி உள்ளனர். இதில் நானும் பங்கேற்க உள்ளேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்,'' என்றார்.
போட்டியில் தேர்வாகி உள்ள திவ்யா கூறுகையில், “முதல் முறை சர்வதேச அளவிலான அழகி போட்டியில் கலந்து கொள்வதை நினைத்தால், எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு முன் பல மாநில, தேசிய அளவிலான அழகி போட்டிகளில் கலந்து கொண்டுள்ளேன். அந்த அனுபவங்களை இதில் பயன்படுத்துவேன்,” என்றார்
. - நமது நிருபர் -